மணமகள் வீட்டாரை ஏமாற்ற ராணுவ உடை அணிந்துகொண்டு ராணுவப்பகுதியில் சுற்றிக்கொண்டிருந்த இளைஞரை போலீஸார் கைதுசெய்தனர்.
இண்டோரில் தலைமை ராணுவ முகாம் பகுதியில் குடியரசு தினத்தன்று அடையாளம் தெரியாத நபர் ஒருவர் ராணுவவீரர் போல் உடையணிந்துகொண்டு ராணுவ முகாம் பகுதியில் சுற்றிக்கொண்டு இருந்திருக்கிறார். அவரது நடை மற்றும் உடை அணிந்திருந்த விதத்தைப் பார்த்து சந்தேகித்த ராணுவத்தினர் போலீஸாருக்கு தகவல் கொடுத்திருக்கின்றனர்.
அந்த நபரை கைதுசெய்த இண்டோர் இன்ஸ்பெக்டர் ஹரிநாராயணசாரி மிஸ்ரா அவரிடம் விசாரணை நடத்தியதில் அவர் பீகாரை சேர்ந்த மிதுன் வர்மா என்று தெரியவந்தது. இதுபற்றி மிஸ்ரா கூறுகையில், ‘’மிதுன் வர்மா என்ற அந்த நபர் பீகாரின் ராஜ்கத் மாவட்டத்திலுள்ள பியோரா பகுதியைச் சேர்ந்தவர். அவர் பிதாபூரில் செக்யூரிட்டியாக பணிபுரிந்து வருகிறார். இன்னும் சில நாட்களில் வர்மாவுக்கு திருமணம் நடைபெற இருக்கிறது. எனவே மணமகள் வீட்டாரை கவர, தான் ஒரு ராணுவவீரர்போல் உடையணிந்துகொண்டு ராணுவ முகாம் பகுதியில் நடைபெற்ற குடியரசு தினவிழாவுக்கு வந்திருக்கிறார். ஆனால் ராணுவ உடையை தவறாக அணிந்திருந்ததால் ராணுவ அதிகாரிகள் கண்டுபிடித்துவிட்டனர்.
மேலும் வர்மாவின் செல்போனை ஆராய்ந்ததில் ராணுவவீரர் ஐடி கார்டை போலியாக தயாரித்து புகைப்படம் எடுத்து வைத்திருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. எதற்காக இவ்வாறு செய்தார்? திருமணத்திற்காக மணமகள் வீட்டாரை ஏமாற்றத்தானா? அல்லது வேறு ஏதேனும் காரணம் இருக்கிறதா? என்பது குறித்த விசாரணை நடைபெற்று வருகிறது’’ என்று கூறினார்.