கர்நாடகாவில் பாம்பு கடித்த நபர் ஒருவர், தன்னை கடித்த பாம்போடு மருத்துவமனைக்கு கிசிச்சை மேற்கொள்ள வந்தது அம்மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற நோயாளிகளையும் மருத்துவ நிர்வாக ஊழியர்களையும் பீதியில் ஆழ்த்தியது.
கர்நாடகா மாநிலம், பெலகாவில் வசித்து வருபவர் ஷாஹித் . இவர் பாம்பு பிடிப்பதில் திறமை வாய்ந்தவர். ஒரு நாள் ஷாஹித்தின் வீட்டிற்குள் பாம்பு ஒன்று நுழையவே, அதை பிடித்து கிராம எல்லையில் விடுவதற்காக சென்றுள்ளார். அப்போது, அந்த பாம்பு, ஷாஹித்தை கடித்துள்ளது. இந்நிலையில், சிகிச்சை மேற்கொள்வதற்காக பெலகாவியில் உள்ள மாவட்ட மருத்துவ மனை ஒன்றிக்கு விரைந்துள்ளார் ஷாஹித்.
ஆனால், இங்குதான் திருப்பமே, சிகிச்சை பெறுவதற்கு ஷாகித் மட்டும் செல்லவில்லை, அவருடன், தன்னை கடித்த பாம்பையும் ஒரு பிளாஸ்டிக் டப்பாவில் அடைத்து வைத்து தன் உடன் கொண்டு சென்றுள்ளார். இந்நிலையில், இதனை கண்டு அலறிய மருத்துவமனை ஊழியர்கள், எதற்காக இந்த பாம்பை கொண்டு வந்தீர்கள் என்று கேட்டுள்ளனர்.
இதற்கு பதிலளித்த அவர், “என்னை கடித்த பாம்பு எந்த வகையை சேர்ந்தது என்று தெரியவில்லை. ஆகவேதான், அதை என்னுடன் கொண்டு வந்தேன். இதன்மூலம், எனக்கு சரியாக மருத்துவ சிகிச்சை அளிப்பதற்கு மருத்துவர்களுக்கு எளிதாக இருக்கும். இதனால்தான், அந்த பாம்பை கொண்டுவந்தேன். இதற்கு பிறகு வேறு எந்த நோக்கமும் இல்லை.” என்று தெரிவித்துள்ளார். தன்னை பாம்பு கடித்த போதும், பதட்டப்படாமல் தன் கையோடு பாம்பையும் எடுத்த சென்ற இச்சம்பவம் அம்மருத்துவமனையில் சற்று சலசலப்பினை ஏற்படுத்தியது.
இந்த சம்பவம் முதல்முறை அல்ல, இதே சம்பவம் ஓராண்டுக்கு முன்பு ஒடிசாவிலும் நடந்துள்ளது. ஒடிசாவில், பாம்பு கடித்த நபர், தன்னை கடித்த பாம்பை பிளாஸ்டிக் பையில் கட்டி மருத்துவமனைக்கு எடுத்து வந்துள்ளார்.
இதனை கண்டு அருகில் இருந்த மற்ற நோயாளிகள் பீதியடையவே, ’இப்படியெல்லாம் பாம்பை கொண்டுவர கூடாது. இதற்கு பதிலாக அதன் புகைப்படத்தை கொண்டு வருவது நலம்.’ என்று அங்கு பணிபுரிந்த ஊழியர்கள் தெரிவித்துள்ளனர். மேலும், அவர் கொண்டு வந்த பாம்பை, பாம்புகளை மீட்பவர்களிடம் ஒப்படைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.