கொரோனா காலத்தில் வேலையிழப்புகளும், வேலை தேடுதலும் இயல்பாகிவிட்டன. வருமானமிழப்பு சிலரை விநோதமான கொள்ளை மற்றும் மோசடிகளில் ஈடுபடவைத்துவிட்டது. மும்பையில் அப்படியொரு நூதனமான மோசடியில் ஈடுபட்ட 33 வயது இளைஞர் தஃபைல் அகம்மது சித்திக் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஏடிஎம் மையங்களில் பணம் எடுக்க சிரமப்படும் நபர்களுக்கு உதவுவதுபோல நடித்து இந்த மோசடியை செய்துள்ளார். அதாவது பணம் எடுக்க சிரமப்படுபவர்களின் ஏடிஎம் அட்டையை வாங்கி பணம் எடுத்துக்கொடுப்பார். அப்போது அவர்களின் பாஸ்வேர்டையும் பார்த்துக்கொள்வார்.
கார்டை திருப்பித்தரும்போது தன்னிடம் ஏற்கெனவே உள்ள போலி அட்டையை கொடுத்துவிடுவார். இப்படி ஏமாற்றிய 100க்கும் அதிகமான டெபிட் கார்டுகள் அந்த இளைஞரிடம் இருந்து கைப்பற்றப்பட்டன.
இதுதொடர்பான புகார்களைத் தொடர்ந்து, காட்கோபார் போலீசார் ஏடிஎம் மையங்களின் சிசிடிவி காட்சிகள் மற்றும் கிடைத்த தகவல்களைக் கொண்டு விசாரணை நடத்தினர். சக்கிநாக்கா என்ற புறநகர்ப் பகுதியில் மோசடி இளைஞர் அகம்மது சித்திக் கைது செய்யப்பட்டார்.
ஏடிஎம் மையங்களில் கார்டு பயன்படுத்துவதில் பிரச்னை உள்ளவர்களைக் கண்டறிந்து மோசடியில் ஈடுபட்டுள்ளார். இதேபோல இரு நபர்களையும் மும்பை போலீசார் கைது செய்துள்ளனர்.