கேரளாவில் கொரோனா ஊரடங்கில் மனைவி மற்றும் குழந்தையை சந்திக்க பல மாவட்டங்களைக் கடந்து செல்ல வேண்டியிருந்ததால், ஒருவர் தனியார் பேருந்தையே திருடிச் சென்ற சம்பவம் நிகழ்ந்துள்ளது.
பத்தனம்திட்டா அருகேயுள்ள திருவல்லாவை சேர்ந்த பினூப், தனது சொந்த ஊரில் வசிக்கும் மனைவி மற்றும் குழந்தையை பார்க்க முடியாமல் கவலையில் இருந்துள்ளார். சொந்த ஊர் செல்ல பேருந்துகள் இல்லாததாலும், 4 மாவட்டங்களைக் கடந்து செல்லவேண்டும் என்பதாலும் கோழிக்கோடு அருகே நின்றிருந்த தனியார் பேருந்தை திருடி தானே இயக்கிக்கொண்டு கிளம்பியுள்ளார் பினூப். சில இடங்களில் காவல்துறையினர் தடுத்து விசாரித்தபோது பத்தனம்திட்டாவிலிருந்து புலம்பெயர்ந்த தொழிலாளர்களை அழைத்து வர அதிகாரிகள் அனுப்பியுள்ளதாக கூறியுள்ளார்.
மலப்புரம், திருச்சூர் வழியே கோட்டயத்தை பினூப் அடைந்தபோது, அவரை குமரகம் காவல்துறையினர் தடுத்து நிறுத்தியுள்ளனர். விசாரணையில் சந்தேகம் அடைந்த காவல்துறையினர் மேலும் விசாரித்ததில் பினூப் உண்மையை ஒப்புக் கொண்டுள்ளார். இதனையடுத்து பினூப்பை கைது செய்த அதிகாரிகள் பேருந்தையும் பறிமுதல் செய்தனர்.