பெங்களூருவில் மேம்பாலத்தில் வாகனத்தை நிறுத்தி கீழே மக்கள் கூட்டம் நிறைந்த மார்க்கெட்டில் ரூபாய் நோட்டுக்களை வீசிய நபரை போலீசார் கைதுசெய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கட்டுக்கட்டாக பணத்தை காற்றில் பறக்கவிடுவதை சினிமாவில்தான் பார்த்திருக்கிறோம். ஆனால் ஒரு நபர் ஹீரோயிசம் செய்வதாக நினைத்து மேம்பாலத்தில் நின்றுகொண்டு பணத்தை அள்ளிவீசிய சம்பவம் பெங்களூருவில் நடந்துள்ளது. இதனை பலரும் வீடியோ எடுத்துள்ளனர். அந்த வீடியோவில், நகரின் டவுன்ஹால் பகுதியிலுள்ள கே.ஆர் மார்க்கெட்டின் மேம்பாலத்தில் தனது காரை நிறுத்திய கோட் சூட் அணிந்த நபர் ஒருவர், கழுத்தில் பெரிய சுவர் கடிகாரத்தை மாட்டிக்கொண்டு கையில் பணக்கட்டுடன் நடந்துவருகிறார். பின்னர் மேம்பாலத்திலிருந்து கீழே பணத்தை அள்ளி வீசுகிறார்.
10 ரூபாய் தாள்களாக மொத்தம் 3000 ரூபாயை வீசிய அந்த நபரிடம் வாகன ஓட்டிகள் தங்களுக்கும் பணம் தருமாறு கேட்கின்றனர். ஆனால் அந்த நபர் பணத்தை கீழே பறக்கவிட்டுவிட்டு தானும் அங்கிருந்து பறந்துவிட்டார். காற்றில் பறந்த பணத்தை எடுக்க மக்கள் அங்குமிங்கும் ஓடியதால் மார்க்கெட் பகுதியில் சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது.
இதுகுறித்து தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தபோது அந்த நபரை காணவில்லை. இந்நிலையில் கிடைக்கப்பெற்ற வீடியோக்களை வைத்து அந்த நபர் யார் என போலீசார் தேடியதில் அவர் பெயர் அருண் என்றும், ஈவன்ட் மேனேஜ்மெண்ட் நிறுவனம் வைத்து நடத்திவருவதும் தெரியவந்தது. அதனையடுத்து, பொது அமைதியை கெடுத்ததாக அவர்மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார். மேலும், எதற்காக அருண் இப்படி செய்தார் என்பது குறித்து விசாரித்துவருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.