தலைநகர் டெல்லியில் புத்தாண்டு இரவின்போது 20 வயதேயாகும் இளம் பெண்ணான அஞ்சலி சிங், சுமார் 12 கி.மீக்கு காரில் இழுத்துச் செல்லப்பட்டு உயிரிழந்திருந்தார். இச்சம்பவத்தில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
டெல்லியில் கடந்த ஜனவரி 1 ஆம் தேதி அதிகாலை நேரத்தில் அஞ்சலி சிங் என்ற இளம் பெண் சென்ற இருசக்கர வாகனத்தின் மீது கார் மோதிய விபத்தில், காரின் அடியில் அப்பெண் சிக்கிக் கொண்டு பல கிலோமீட்டர் தூரம் (சுமார் 12 கி.மீ.க்கு) இழுத்துச் செல்லப்பட்டு பரிதாபமாக உயிரிழந்திருந்தார்.
இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில் இந்த வழக்கில் அடுத்தடுத்த திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்து அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.
இவ்வழக்கில் காரில் இருந்தவர்கள் என்ற அடிப்படையில், சில தினங்களுக்கு முன் காவல்துறையினர் 5 பேரை கைது செய்திருந்தனர். அவர்களில் காரை ஓட்டியதாக குற்றம் சாட்டப்பட்ட நபர், கடந்த ஞாயிற்றுக்கிழமை காலை, அதாவது டெல்லியின் கான்ஜவாலாவில் விபத்து நடந்தபோது வாகனத்திற்குள்ளேயே இல்லை என்பது தற்போது தெரியவந்துளது.
இதுபற்றி வெளியாகியுள்ள தகவல்களின்படி, இவ்வழக்கில் தீபக் கண்ணா, அமித் கண்ணா, கிருஷ்ணன், மிதுன், மனோஜ் மிட்டல் ஆகிய ஐவரை கைது செய்யப்பட்டிருந்தனர். அவர்களிடம் காவல்துறையினர் நடத்திய விசாரணையில் காரை இயக்கியது தீபக் அல்ல அமித் என்பது தெரியவந்துள்ளது. அமித்துக்கு ஓட்டுநர் உரிமம் இல்லை என்பதால் அவரது உறவினர்களும் நண்பர்களும் தீபக்கிடம் பேசி காரை அவரே ஓட்டியதாக போலீஸில் சொல்லுமாறு கூறியுள்ளனர். இதையடுத்து தீபக்கும், தான் காரை ஓட்டியதாக போலீசாரிடம் கூறியுள்ளார்.
ஆனால் தீபக்கின் தொலைபேசி விவரங்களை காவல்துறையினர் விசாரித்தபோது, வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள மற்ற நான்கு பேரின் தொலைபேசி இருப்பிடத்துடன் அது பொருந்தவில்லை என்று அவர்களுக்கு தெரியவந்துள்ளது. அவரது தொலைபேசி இருப்பிடம் மற்றும் அழைப்பு பதிவுகள் அனைத்தும், அன்றைய நாள் முழுவதும் அவர் வீட்டில் இருந்ததையே காட்டியது என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், காரின் உண்மையான உரிமையாளரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். காரில் இருந்த ஐந்து பேரும் அசுதோஷிடம் இருந்து காரை இரவல் வாங்கியதாக குறிப்பிட்டிருந்தனர். அந்த ஐவரில் ஒருவர் அந்த காரில் இல்லவே இல்லையென தெரிந்துள்ள நிலையில், காரின் உரிமையாளர் அசுதோஷ் கைது செய்யப்பட்டுள்ளார்.