டெல்லி அருகே டூத் பிரஷை தெரியாமல் விழுங்கிய இளைஞர் ஒருவர், டாக்டர்களிடமும் அதனை மறைத்த சம்பவம் அரங்கேறியுள்ளது.
டெல்லி அடுத்த சீமாபுரியைச் சேர்ந்த 36 வயது இளைஞர் ஆவிட். இவர் தனது தொண்டையின் உள்புறத்தை டூத் பிரஷ் கொண்டு சுத்தம்செய்து கொண்டிருந்தபோது தெரியாமல் அதனை விழுங்கியுள்ளார். ஆனால் அதனை அவர் யாரிடமும் தெரிவிக்கவில்லை. அதுவாகவே வெளிவந்துவிடும் என எண்ணியுள்ளார். ஆனால் அடுத்த நாள் காலையில் அவரின் வயிற்றில் வலி ஏற்பட்டுள்ளது. உடனடியாக மருத்துவமனைக்கு சென்ற அவருக்கு மருத்துவர்கள் வலி நிவாரண மருந்துகளை வழங்கியுள்ளனர். அப்போதும் கூட மருத்துவர்களிடம் தான் டூத் பிரஷை தெரியாமல் விழுங்கியதை ஆவிட் கூறவில்லை.
வலி நிவாரணப் பொருட்கள் கொடுத்தும் வலி தொடர்ந்ததால் ஆவிட்டின் நெஞ்சுப் பகுதி எக்ஸ் ரே எடுக்கப்பட்டது. ஆனால் அதில் எந்தவொரு தவறான விஷயமும் கண்டுபிடிக்கப்படவில்லை. இதனையடுத்து ஆவிட்டின் வயிற்றுப் பகுதியினை ஸ்கேன் செய்து பார்த்துள்ளனர். அப்போது அதில் ஏதோ மர்ம பொருள் இருப்பதை மருத்துவர்கள் கண்டுபிடித்தனர். அதனையடுத்து ஆவிட்டும் தான் தெரியாமல் டூத் பிரஷை விழுங்கியதை ஒப்புக்கொண்டார்.
இதனையடுத்து மருத்துவர்கள் ஆவிட்டை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு செல்லுமாறு பரிந்துரைத்தனர். எய்ம்ஸ் மருத்துவர்கள் என்டோஸ்கோப்பி மூலம் அவரின் வயிற்றில் இருந்த டூத் பிரஷை வெளியில் எடுத்துள்ளனர். அன்றைய தினமே அவர் மருத்துவமனையிலிருந்து விடுவிக்கப்பட்டார். இதேபோன்ற சம்பவம் கடந்த சில நாட்களுக்கு முன் ஆக்ராவிலும் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.