இந்திய அரசின் மீது மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜிக்கு நம்பிக்கை இல்லையா என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கேள்வி எழுப்பியுள்ளார்.
தேசிய குடிமக்கள் பதிவேடு மற்றும் குடியுரிமை திருத்தச் சட்டம் குறித்து ஐ.நா. கண்காணிப்பின்கீழ் பொது வாக்கெடுப்பு நடத்த மத்திய அரசு தயாரா என மம்தா பானர்ஜி சவால் விடுத்திருந்தார். இந்த நிலையில் இந்திய அரசு மீது மேற்குவங்க முதலமைச்சருக்கு நம்பிக்கை இல்லையா? எனக் கேள்வி எழுப்பியுள்ள மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் , உள்நாட்டு விவகாரத்தில் மூன்றாம் நபரோ அல்லது சர்வதேச அமைப்போ தலையிட விரும்பவில்லை என்று கூறினார். உள்நாட்டைச் சேர்ந்த விவகாரத்தில் ஐ.நா. தலையிட வேண்டும் என்ற மம்தாவின் பேச்சு, பொறுப்பற்ற செயலைக் காட்டுவதாக மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் சாடினார்.
மம்தா பானர்ஜினியின் கருத்துக்கு மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் கண்டனம் தெரிவித்துள்ளார். நாட்டு மக்களை, மம்தா பானர்ஜி அவமதித்து விட்டதாகவும், அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் வலியுறுத்தியுள்ளார்.