“5 நிமிடம் கூட பேச வாய்ப்பளிக்கவில்லை” - நிதி ஆயோக் கூட்டத்தில் இருந்து மம்தா பானர்ஜி வெளிநடப்பு!

பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மாநில முதலமைச்சர்கள் பங்கேற்கும் நிதி ஆயோக் அமைப்பின் கூட்டம் இன்று காலை 11 மணி அளவில் டெல்லியில் தொடங்கியது. ஆனால், இக்கூட்டத்தை எதிர்க்கட்சித்தலைவர்கள் புறக்கணித்துள்ளனர்.
மம்தா பானர்ஜி
மம்தா பானர்ஜிpt web
Published on

பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மாநில முதலமைச்சர்கள் பங்கேற்கும் நிதி ஆயோக் அமைப்பின் கூட்டம் இன்று காலை 11 மணி அளவில் டெல்லியில் தொடங்கியது. மத்திய பட்ஜெட்டில் I.N.D.I.A. கூட்டணி ஆளும் மாநிலங்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுப்பிய எதிர்க்கட்சிகள், இக்கூட்டத்தை புறக்கணித்துள்ளனர்.

அதன்படி, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கேரள முதலமைச்சர் பினராயி விஜயன், காங்கிரஸ் கட்சி ஆளும் மாநில முதலமைச்சர்களான கர்நாடகாவின் சித்தாராமையா, தெலங்கானாவின் ரேவந்த் ரெட்டி, ஹிமாச்சல் பிரதேசத்தின் சுக்விந்தர் சுகு மற்றும் பஞ்சாப் முதலமைச்சர் பகவந்த் மான் சிங், ஜார்க்கண்ட் முதலமைச்சர் ஹேமந்த் சோரன் உள்ளிட்டோர் இக்கூட்டத்தை புறக்கணித்துள்ளனர்.

மம்தா பானர்ஜி
“பட்ஜெட்.. மோடியின் அரசியல் பிழைப்பிற்கான முதலீடு” - மக்களவையில் விளாசி தள்ளிய எதிர்க்கட்சிகள்!

அதேநேரம் I.N.D.I.A. கூட்டணியிலுள்ள மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பேனர்ஜி மட்டும் கூட்டணியில் கலந்துகொண்டார். இதுகுறித்து அவர், “இக்கூட்டத்தில் பங்கேற்று மத்திய அரசின் பாகுபாட்டை கண்டித்து குரல் கொடுப்பேன்” என் முன்னதாகவே தெரிவித்திருந்தார். அதன்படி, நிதி ஆயோக் கூட்டத்தில் கலந்தும் கொண்டார். கூட்டத்தில் கலந்துகொண்டபின் அவர் கூட்டத்திலிருந்து வெளிநடப்பு செய்துள்ளார்.

இதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்த அவர், இதுகுறித்து பேசுகையில், “மத்திய பட்ஜெட்டில் எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களுக்கு பாரபட்சம் காட்டப்பட்டுள்ளது. மத்திய பட்ஜெட் குறித்து நிதி ஆயோக் கூட்டத்தில் எனது எதிர்ப்பினை பதிவு செய்ய எனக்கு 5 நிமிடம் கூட அவர்கள் வாய்ப்பு அளிக்கவில்லை. மத்திய அரசின் பாரபட்சத்தை ஒருநாளும் பொறுத்துக் கொள்ள முடியாது. பட்ஜெட் என்பது அரசியல் ரீதியாக ஒருதலைப்பட்சமாக தயாரிக்கப்பட்டுள்ளது” என்று கடுமையாக சாடியுள்ளார்.

முன்னதாக, இன்று காலை நிதி ஆயோக் கூட்டத்தை தான் புறக்கணித்ததன் காரணத்தை காணொளி வாயிலாக தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்திருந்தார். அதில், “மத்திய பட்ஜெட்டில் தமிழ்நாட்டை புறக்கணித்த பாஜக அரசு, பள்ளிக்கல்வித் துறையை முடக்கும் செயல்களில் ஈடுபட்டு வருகிறது” என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.

மேலும் , இது குறித்து தெரிவித்த அவர், “தேர்தலில் பாஜகவை புறக்கணித்த மக்களை பழிவாங்கும் வகையில் பட்ஜெட்டை மத்திய அரசு தாக்கல் செய்துள்ளது. ஒரு நல்ல அரசு என்பது வாக்களித்த மக்களுக்கு மட்டுமல்ல; வாக்களிக்க மறந்த மக்களுக்கும் சேர்த்தே பாடுபட வேண்டும். ஆனால், அந்த பெருந்தன்மை பாஜக அரசிடம் இல்லை.

சென்னை மெட்ரோ ரயில் 2ஆம் கட்ட பணிகளுக்கு ஒரு ரூபாயை கூட மத்திய அரசு விடுவிக்கவில்லை. மெட்ரோ ரயில், மாநில அரசின் திட்டம் என பதில் அளிக்கும் மத்திய அரசு, ரயில்வே துறையை மாநிலங்களுக்கு ஒதுக்கி விடுவார்களா? கோவை, மதுரை மெட்ரோ ரயில் திட்டத்திற்கான ஒப்புதல் குறித்து மூச்சுவிடாத மத்திய அரசு, மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையையும் 10 ஆண்டுகளாக கிடப்பில் போட்டுள்ளது” என்று அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்திருந்தார்.

இப்படியாக வருடாந்திர கூட்டமான நிதி ஆயோக் கூட்டத்தை எதிர்க்கட்சித் தலைவர்கள் கூட்டாக புறக்கணித்திருப்பது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com