திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற குழு தலைவராக மம்தா பானர்ஜி நியமிக்கப்பட்டுள்ளார்.
மக்களவைத் தேர்தலில் 29 தொகுதிகளை வென்ற திரிணமூல் காங்கிரஸ், பாஜக, காங்கிரஸ், சமாஜ்வாடிக்கு அடுத்து நான்காவது பெரிய கட்சியாக உயர்ந்துள்ளது. இந்த நிலையில் கட்சியின் மக்களவை குழு தலைவராக சுதிப் பந்த்யோபாத்யாய், துணை தலைவராக கக்கோலி கோஷ் தஸ்திதார், தலைமை கொறடாவாக கல்யாண் பானர்ஜி ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இதேபோன்று கட்சியின் மாநிலங்களவை குழு தலைவராக டெரிக் ஓ பிரையன், துணைத் தலைவராக சஹாரிகா கோஸ், தலைமை கொறடாவாக நதிமுல் ஹக் ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
இதனிடையே, கொல்கத்தாவில் திரிணமூல் காங்கிரஸின் புதிய எம்பிக்கள் உடனான ஆலோசனைக்குப் பிறகு பேசிய அக்கட்சியின் தலைவர் மம்தா பானர்ஜி, ”பாஜக சட்டவிரோதமாக ஆட்சியமைத்துள்ளது. பாஜக கூட்டணி எம்பிக்கள் யாரும் மகிழ்ச்சியாக இல்லை. மேலும், நடப்பு நிகழ்வுகளை உன்னிப்பாக கவனித்து வருகிறேன்.சரியான நேரத்தில் இந்தியா கூட்டணி ஆட்சி அமைக்கும்.” என்று தெரிவித்தார்.