மம்தா பானர்ஜி
மம்தா பானர்ஜிஎக்ஸ் தளம்

”முதல்வர் பதவியை ராஜினாமா செய்யவும் தயார்.. நீதி கிடைக்க வேண்டும் என்பதே என் கவலை” - மம்தா பானர்ஜி

”மக்களின் நலனுக்காக தனது பதவியை ராஜினாமா செய்ய தயார்” என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
Published on

வடக்கு கொல்கத்தாவில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பணியாற்றிய பெண் முதுகலை பயிற்சி மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கொல்லப்பட்ட விவகாரம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக, நாள்தோறும் பல்வேறு புதிய தகவல்கள் வந்தபடி இருந்தன. இந்த வழக்கு குறித்து சிபிஐ தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறது.

இந்த விசாரணையில் சமூக ஆர்வலர் சஞ்ஜய் ராய், மருத்துவமனையின் முன்னாள் முதல்வர் சந்தீப் கோஷ் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். மறுபுறம் இந்த வழக்கில் நீதி வேண்டி அம்மாநில பயிற்சி மருத்துவர்கள், மாணவர்கள் கடந்த 30 நாட்களுக்கும் மேலாகப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பணிக்குத் திரும்புமாறு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டும் அவர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியும், "போராட்டத்தைக் கைவிட்டு பணிக்குத் திரும்புங்கள்" என்று மருத்துவர்களுக்குக் கோரிக்கை விடுத்திருந்தார்.

இருப்பினும், இந்த விவகாரத்தில் உரிய நீதியும், மருத்துவர்களுக்கான பாதுகாப்பு நடவடிக்கைகளையும் உறுதி செய்யாமல் போராட்டத்தைக் கைவிடப்போவதில்லை என்று மருத்துவர்கள் போராட்டத்தைத் தொடர்ந்து நடத்தி வருகின்றனர். இவர்களுடைய போராட்டம் காரணமாக, மாநிலத்தில் 7 லட்சம் நோயாளிகள் பாதிக்கப்பட்டிருப்பதாகவும், 27 பேர் உயிரிழந்திருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த நிலையில், போராட்டம் நடத்தும் பயிற்சி மருத்துவர்களைப் பேச்சுவார்த்தைக்கு வருமாறு அரசு அழைப்பு விடுத்தது. அதற்கு அவர்கள் தரப்பில் சில கோரிக்கைகள் வைக்கப்பட்டதாகவும், அதை அரசு மறுத்ததாகவும் கூறப்படுகிறது. இத்தகைய சூழலில், தலைமைச் செயலகத்தில் இன்று பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆனால், நேரலை ஒளிபரப்புக்கு அரசு மறுத்ததால் பயிற்சி மருத்துவர்கள் தரப்பில் யாரும் பேச்சுவார்த்தையில் கலந்துகொள்ளவில்லை என்று கூறப்படுகிறது. இந்நிலையில், முதல்வர் பதவியை ராஜினாமா செய்யவும் தயாராக இருப்பதாக மம்தா தெரிவித்திருக்கிறார்

இதையும் படிக்க: சீனா | அலுவலகத்தில் முத்தம்.. ஆக்‌ஷன் எடுத்த நிர்வாகம்.. வழக்கு தொடுத்த ஜோடிக்கு நீதிமன்றம் கொட்டு!

மம்தா பானர்ஜி
கொல்கத்தா பயிற்சி மருத்துவர் கொலை | மருத்துவக் கல்லூரியின் முன்னாள் முதல்வர் கைது.. சிபிஐ அதிரடி!

இதுகுறித்து பேசியுள்ள முதல்வர் மம்தா பானர்ஜி, ”பதவியைப் பற்றி எனக்குக் கவலையில்லை. எனக்கு நீதிதான் வேண்டும். நீதியைப் பற்றி நான் மட்டுமே கவலைப்படுகிறேன். எனவே, முதல்வர் பதவியை ராஜினாமா செய்யவும் நான் தயார். பயிற்சி மருத்துவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த என்னால் முடிந்தவரை நான் முயற்சித்தேன். உச்ச நீதிமன்றத்தின் உத்தரவைப் பயிற்சி மருத்துவர்கள் ஏற்காதபோதும், தலைமைச் செயலர், உள்துறைச் செயலர், டிஜி உள்ளிட்ட உயர் அதிகாரிகளுடன் மூன்று நாள்களுக்காக அவர்களுக்காகக் காத்திருந்தேன்.

எனக்கு எந்தப் பிரச்னையும் இல்லை. ஆனால், சாமானியர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும். உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து மூன்று நாள்களாகியும் பயிற்சி மருத்துவர்கள் பணிக்குத் திரும்பவில்லையென்றாலும், சில சமயம் பொறுத்துக்கொள்ள வேண்டியிருப்பதால் எந்த ஒழுங்கு நடவடிக்கையும் எடுக்கவில்லை. பொறுத்துக் கொள்வது நம் கடமைதான்" எனத் தெரிவித்துள்ளார்.

இதையும் படிக்க: மாணவர்தலைவர் To இடதுசாரி சிந்தனையாளர்! நாடாளுமன்றவாதிகள் போற்றும் ஆளுமை! யார்இந்த சீதாராம் யெச்சூரி?

மம்தா பானர்ஜி
கொல்கத்தா மருத்துவர் கொலை: Ex Dean-க்கு கடிதம் எழுதியிருந்த மம்தா? பாஜக குற்றச்சாட்டு.. CBI விசாரணை!
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com