மஹுவா மொய்த்ராவின் எம்.பி பதவி பறிப்பு? என்ன நடந்தது? மம்தா சொல்வதென்ன?

“நாடாளுமன்ற விதிகளை மீறி, மாண்பை குலைக்கும் வகையில் செயல்பட்டார்” என திரிணாமூல் காங்கிரஸ் எம்.பி மகுவா மொய்த்ரா மீது குற்றச்சாட்டு எழுந்த நிலையில், எம்.பி பதவியில் இருந்து அவர் நீக்கப்பட்டுள்ளார். என்ன நடந்தது என்பதை முழுமையாக பார்க்கலாம்.
மஹுவா மொய்த்ரா
மஹுவா மொய்த்ராfile image
Published on

நாடாளுமன்ற வளாகத்தில் ஆளும் பாஜக அரசு குறித்தும், அதானி குழும முறைகேடு குறித்தும் கேள்விக்கணைகளை தொடுத்து சிங்கமென கர்ஜித்து வந்தவர்தான் திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் எம்.பி மஹுவா மொய்த்ரா. நாடாளுமன்றத்தில் நூற்றுக்கணக்கான எம்.பிக்கள் இருந்தாலும், ஒருசிலர் மட்டுமே ஆளும் கட்சியை கேள்விகளின் மூலம் அதிரவைக்கின்றனர். அப்படி, காங்கிரஸில் ராகுல் காந்தி என்றால், திரிணாமூல் காங்கிரஸில் மஹுவா மொய்த்ரா இருக்கிறார். இந்நிலையில்தான், அதானி குறித்து நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்ப தொழிலதிபர் ஒருவரிடம் மஹுவா மொய்த்ரா பணம் பெற்றதாக குற்றச்சாட்டை கையில் எடுத்தது பாஜக.

திரிணாமூல் காங்கிரஸ் கட்சியில் தொடர்ந்து இரண்டாவது முறையாக எம்.பியாக தேர்ந்தெடுக்கப்பட்டவர் மஹுவா. நாடாளுமன்றத்திலும் சரி, சமூகவலைதளங்களிலும் சரி அதிரடியாக கேள்வி எழுப்பும் நபராக இருந்து வருகிறார் இவர். இந்நிலையில், அதானி குழுமம் குறித்து கேள்வி எழுப்ப மொய்த்ரா பணம் வாங்கியுள்ளார் என்ற தீயை கொளுத்திப் போட்டார் வழக்கறிஞர் ஜெய் ஆனந்த் தேஹத்ராய். இதனை கையில் எடுத்த பாஜக எம்பி நிஷிகாந்த் துபே, நாடாளுமன்ற மக்களவை தலைவர் ஓம் பிர்லாவிடம் புகார் அளிக்க, அவரது பரிந்துரையின் பேரில் நாடாளுமன்ற நெறிமுறைகள் குழு விவகாரத்தை விசாரித்து வந்தது.

“மக்களவையில் மஹுவா மொய்த்ரா இதுவரை கேட்டுள்ள, 61 கேள்விகளில், 50 கேள்விகள், அதானி குழுமம் தொடர்பானவை. அதானி குழுமம் தொடர்பாக இந்த கேள்விகளை எழுப்ப, மற்றொரு நிறுவனத்திடம் இருந்து அவர் லஞ்சம் வாங்கியுள்ளார். இதுதொடர்பான ஆதாரங்கள் உள்ளன” என்று மஹுவா மொய்த்ரா மீது நிஷிகாந்த் துபே புகார் கொடுத்தார். இந்த வழக்கறிஞர் ஆனந்த் தேஹத்ராய், மஹுவா மொய்த்ராவின் முன்னாள் காதலர்.

மஹுவா மொய்த்ரா
மக்களவையில் பேச லஞ்சம்: மஹுவா மொய்த்ரா எம்.பி. பதவிநீக்கம்!

இந்நிலையில், குற்றச்சாட்டை வைத்த இருவரையும் அழைத்து நவம்பர் மாதம் விசாரணை நடத்தியது நாடாளுமன்ற நெறிமுறைகள் குழு. பாஜக எம்பி வினோத் குமார் சோன்கர் தலைமையிலான இந்த குழு கடந்த நவம்பர் 9ம் தேதி அதன் அறிக்கையை வெளியிட்டது. தொடர்ந்து, அறிக்கை நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்யப்பட்டது. அத்தோடு மஹுவா மொய்த்ராவை எம்பி பதவியிலிருந்து நீக்கும் பரிந்துரையையும் முன்வைத்தது. தொடர்ந்து, மக்களவையில் குரல் வாக்கெடுப்பு எடுக்கப்பட்டு மஹுவா மொய்த்ரா எம்.பி பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.

தொடக்கத்தில் பேசிய மஹுவா மொய்த்ரா, "இதையெல்லாம் செய்து என்னை அச்சுறுத்த முடியாது. அதானி குழுமத்திற்கு எதிராக என் வாயை அடைக்கவே முயற்சிக்கின்றனர். ஆனால் ஒருபோதும் என்னை ஒடுக்க முடியாது. தொடர்ந்து கேள்விகளை கேட்பேன் என்றார். இந்த நிலையில், எம்பி பதவியில் இருந்து நீக்கப்பட்ட நிலையில், முழுமையாக விசாரணை நடத்தாமல் என் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பதவியில் இருந்து நீக்கினாலும், சிபிஐ விசாரணை மேற்கொண்டாலும் தொடர்ந்து கேள்வி எழுப்பிக்கொண்டே இருப்பேன்" என்று இன்று ஆக்ரோஷமாக பேசியுள்ளார்.

மஹுவா மொய்த்ரா
மக்களவையில் பேச லஞ்சம்: மஹுவா மொய்த்ரா எம்.பி. பதவிநீக்கம்!

இந்த விவகாரம் குறித்து பேசியுள்ள மம்தா பானர்ஜி, “மஹுவா மொய்த்ராவுக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளது. அவர் விளக்கம் கொடுக்க அவகாசம் தரவில்லை. இதனை எதிர்த்து திரிணாமுல் காங்கிரஸ் மட்டுமல்லாது ஒட்டுமொத்த I.N.D.I.A கூட்டணி கட்சிகளும் போராடும்” என்றுள்ளார்.

மஹுவா மொய்த்ரா
கேரளா: வரதட்சணை கொடுமையால் நின்றுபோன திருமணம்... மருத்துவக் கல்லூரி மாணவியின் விபரீத முடிவு

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com