பொதுவாக ஆண்டின் முதல் சட்டப்பேரவைத் கூட்டத்தொடர், அந்தந்த மாநில ஆளுநரின் உரையுடன் தொடங்குவது வழக்கம். ஆனால்,
மேற்கு வங்கத்தில் அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி, மத்திய அரசு மற்றும் ஆளுநருடன் கடும் அதிருப்தியில் உள்ளதால், சட்டப்பேரவையில் பட்ஜெட் கூட்டத்தொடரில் உரையாற்ற ஆளுநரை அழைக்கவில்லை. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து 'ஜெய் ஸ்ரீராம்' கோஷங்களை எழுப்பியவாறே பாஜக உறுப்பினர் சட்டப்பேரவையில் இருந்து வெளியேறினர். மாநில அரசின் செயல்பாட்டை கண்டித்து, காங்கிரஸ், இடதுசாரிகளும் இந்தக் கூட்டத்தொடரை புறக்கணித்துள்ளனர்.
இதனிடையே, அம்மாநிலத்தின் நிதித்துறை அமைச்சர் அமித் மிஸ்ரா உடல்நலப் பிரச்னைகள் காரணமாக பேரவைக் கூட்டத்தில் கலந்துகொள்ள முடியாததால், 2021-22-ஆம் ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டை முதல்வர் மம்தா பானர்ஜியே தாக்கல் செய்தார். தேர்தல் நடைபெற்று புதிய அரசாங்கம் பொறுப்பேற்கும் வரையிலான செலவுகளுக்கு நிதி அளிக்க அனுமதி கோரி இந்த இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யபட்டது.
'நேதாஜி பட்டாலியன்' படைப் பிரிவு...
ரூ.2,99,688 கோடி மதிப்பில் பட்ஜெட்டை தாக்கல் செய்த மம்தா பானர்ஜி, பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார். கொல்கத்தா போலீஸ் படையில் 'நேதாஜி பட்டாலியன்' படை பிரிவு புதிதாக உருவாக்கப்படும் என்றும், நேதாஜி மாநில திட்டமிடல் ஆணையம் அமைக்கப்படும் என்றும் மம்தா பானர்ஜி அறிவித்த்துள்ளார். ஜனவரி 1 முதல் ஜூன் 30 வரை அனைத்து பயணிகள் போக்குவரத்து வாகனங்களுக்கும் சாலை வரி தள்ளுபடி செய்வதாகவும் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது.
சட்டப்பேரவையில் உரையாற்றிய மம்தா, ``இது ஒரு தேர்தல் ஆண்டு என்பதால் இது ஒரு இடைக்கால பட்ஜெட். மத்திய அரசிடம் தேவையான உதவி கிடைக்கவில்லை என்றாலும், மாநிலத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்காக எனது அரசாங்கம் அயராது உழைத்து வருகிறது. பழங்குடியின மக்கள் அதிகம் வாழும் பகுதிகளில் 800-க்கும் மேற்பட்ட புதிய பள்ளிகளை அமைப்பதற்கு ரூ.300 கோடி ஒதுக்கீடு செய்யபட்டுள்ளது. மாநிலத்தின் வடக்கு மற்றும் மேற்கு பகுதிகளில் கோர்கா-குர்மாலி மொழி பேசும் மக்கள் நிறைந்த இடங்களில் ஆங்கிலம் மற்றும் அவர்களின் தாய் மொழி கல்விக்கு முக்கியத்தும் அளிக்கப்படும். நேபாளி, இந்தி, உருது மற்றும் குர்மாலி பேசும் சமூகங்களுக்காக தனி பள்ளிகள் அமைக்கப்படும்" என்றார்.
விவசாயிகளுக்கு...
தொடர்ந்து, ``கிசான் நிதி சம்மன் யோஜனாவின் கீழ் உள்ள நிதி உதவிகளை உடனடியாக மாநிலத்தின் அனைத்து விவசாயிகளுக்கும் விடுவித்து விநியோகிக்குமாறு மத்திய அரசிடம் மீண்டும் கோரிக்கை விடுத்துள்ளோம். எஸ்சி மற்றும் எஸ்டி சமூகங்களுக்காக 20 லட்சம் வீடுகளை கட்டவும், மண் வீடுகளை மேம்படுத்தவும் முடிவு செய்துள்ளோம். இந்தத் திட்டத்திற்காக ரூ.1,500 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அரசாங்கத்துடன் இணைந்த, ஆனால் உதவி பெறாத மதரஸாக்களுக்கு இனிமேல் அரசாங்க உதவி வழங்கப்படும்" என்று உறுதியளித்தார்.
"என் மீது நம்பிக்கை வையுங்கள், நான் உங்களுக்கு நிபந்தனையற்ற மற்றும் தன்னலமற்ற சேவையை மிகுந்த அர்ப்பணிப்புடன் தருவேன்" என்று ரவீந்திரநாத் தாகூரை மேற்கோள் காட்டி தனது பட்ஜெட் உரையை முடித்தார் மம்தா.
'மத்திய அரசு திட்டங்களை மேற்கு வங்க அரசு அனுமதிக்காததால், அவற்றின் பயன்களை மேற்கு வங்க விவசாயிகள் அடைய முடியவில்லை. பிரதம மந்திரி கிசான் திட்டத்தில் பங்கேற்காமல், விவசாயிகளுக்கு துரோகம் இழைக்கிறார்' என்ற விமர்சனத்துக்கு பதிலடி கொடுக்கும் வகையில், மாநிலத்தின் முதன்மை கிரிஷக் பந்து திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கான உதவித்தொகையை ஆண்டுக்கு ரூ.5,000-ல் இருந்து ரூ.6,000 ஆக உயர்த்தி வழங்கும் அறிவிப்பையும் இந்த பட்ஜெட்டில் வெளியிட்டார் மம்தா.
- மலையரசு