பள்ளிகளில் சுதந்திர தினக் கொண்டாட்டம்: மத்திய அரசின் உத்தரவுக்கு மேற்கு வங்க அரசு எதிர்ப்பு

பள்ளிகளில் சுதந்திர தினக் கொண்டாட்டம்: மத்திய அரசின் உத்தரவுக்கு மேற்கு வங்க அரசு எதிர்ப்பு
பள்ளிகளில் சுதந்திர தினக் கொண்டாட்டம்: மத்திய அரசின் உத்தரவுக்கு மேற்கு வங்க அரசு எதிர்ப்பு
Published on

பள்ளிகளில் சுதந்திர தின விழா கொண்டாட்டம் தொடர்பான மத்திய அரசின் உத்தரவை பின்பற்ற மேற்கு வங்க அரசு மறுத்துள்ளது.

நாட்டின் சுதந்திர தின விழா நாளை கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, மத்திய அரசின் மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சக இணை செயலாளர் மனீஷ் கார்க், அனைத்து மாநில அரசுகளுக்கும் ஒரு சுற்றறிக்கை அனுப்பினார். அதில், சுதந்திர தின பவளவிழா ஆண்டுக்குள் (2022) புதிய இந்தியாவை படைக்க வேண்டும் என்ற பிரதமர் நரேந்திர மோடியின் கனவை நனவாக்கும் வகையில், ஆகஸ்டு 9 ஆம் தேதி முதல் 30 ஆம் தேதி வரை, அனைத்து பள்ளிகள் மற்றும் கல்வி நிறுவனங்களில் ‘சங்கல்ப்’ என்ற நிகழ்ச்சி நடத்தப்பட வேண்டும் என்று கூறியிருந்தது.

அந்த நிகழ்ச்சியில், நாட்டை தூய்மையாக்கவும், புதிய இந்தியாவை படைக்கவும், வறுமை, ஊழல், பயங்கரவாதம், வகுப்புவாதம், சாதிக்கொடுமை ஆகிய 5 பிரச்னைகளில் இருந்து நாட்டை விடுவிக்கவும் பாடுபடுவோம் என்று அனைத்து மாணவர்களும் உறுதிமொழி எடுக்க வேண்டும். மேலும், சுதந்திர போராட்டம் குறித்து வினாடி வினா போட்டி, ஓவியப் போட்டி ஆகியவற்றை நடத்த வேண்டும். இதற்கான கேள்விகளை நரேந்திர மோடி செயலியில் (ஆப்) இருந்தோ அல்லது அரசின் அதிகாரபூர்வ இணையதளத்தில் இருந்தோ பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று கூறியிருந்தது.

இந்த சுற்றறிக்கை குறித்து வேறு எந்த மாநிலமும் எதிர்ப்பு தெரிவிக்காத நிலையில், மம்தா பானர்ஜி ஆட்சி நடத்தும் மேற்கு வங்க அரசு மட்டும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. மத்திய அரசு பிறப்பித்த சுற்றறிக்கையை பின்பற்ற வேண்டாம் என்றும், அதில் கூறியபடி சுதந்திர தின நிகழ்ச்சிகளை நடத்த வேண்டாம் என்றும் மேற்கு வங்க மாநில பள்ளிக்கல்வித்துறை, மாநிலத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் கடிதம் எழுதியுள்ளது.

இந்நிலையில், மேற்கு வங்க அரசின் செயலுக்கு மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை மந்திரி பிரகாஷ் ஜவடேகர் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுபற்றி அவர் கூறுகையில், “மத்திய அரசு பிறப்பித்த சுற்றறிக்கையின் நோக்கம், தேசபக்தி உணர்வை உருவாக்க வேண்டும் என்பதுதான். இது ஒரு அரசியல் கட்சியின் செயல் திட்டம் அல்ல. மதச்சார்பற்ற செயல் திட்டம். மத்திய அரசு கூறியபடி, நிறைய மாணவர்கள் ஆர்வத்துடன் ஓவியப் போட்டிகளில் பங்கேற்று வருகிறார்கள். இந்த நிலையில், மேற்கு வங்க அரசு எடுத்த முடிவு துரதிருஷ்டவசமானது. அவர்களுடன் இதுகுறித்து பேசுவேன். அவர்களுக்கு நல்லெண்ணம் பிறக்கட்டும்” என்று கூறினார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com