திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவரும் மேற்குவங்க முதல்வருமான மம்தா பானர்ஜி இசைக்கருவி வாசித்த காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
சர்வதேச வர்த்தகம் தொடர்பாக, வெளிநாட்டு முதலீடுகளை திரட்டும் நோக்கத்தில் மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி ஜெர்மனி மற்றும் இத்தாலி ஆகிய நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். மம்தா பானர்ஜி ஜெர்மனியில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள போது, அவர் அங்கு இசைக்கருவி ஒன்றை வாசித்த காட்சி சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது.
ஜெர்மனியில் மிக்கி மவுஸ் உடை அணிந்த இசைக்கலைஞரிடம் இருந்த இசைக்கருவியில் HUM HONGE KAAMYAB என்ற பாடலை வாசித்துள்ளார். சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் இந்த வீடியோவை ஏரளமானோர் ஷேர் செய்து வருகின்றனர். இந்நிலையில் மேற்குவங்கத்தில் பல்வேறு பிரச்னைகள் நிலவிவரும் சூழலில், ரோம் பற்றி எரிந்தபோது நீரோ மன்னன் பிடில் வாசித்ததுபோல், மம்தா பானர்ஜியின் செயலும் அதைப் போன்றே இருப்பதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த சுஜன் சக்ரவர்த்தி விமர்சனம் செய்துள்ளார்.