நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடரின் 5வது நாளான இன்று (டிச.8), மக்களவையில் பேச லஞ்சம் பெற்றது தொடர்பான குற்றச்சாட்டில் திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. மஹுவா மொய்த்ரா பதவி நீக்கம் செய்யப்பட்டார்.
முன்னதாக, பாஜக எம்.பி. விஜய் சோன்கர், திரிணாமுல் காங்கிரஸ் கட்சி உறுப்பினர் மஹுவா மொய்த்ராவை பதவி நீக்கம் செய்ய பரிந்துரைக்கும் அறிக்கையை மக்களவையில் தாக்கல் செய்தார். இந்த தீர்மானத்தை மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி முன்மொழிந்தார்.
இதையடுத்து எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால் அவை 2 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது. பின்னர் 2 மணிக்கு அவை தொடங்கியபிறகு, மஹுவா தொடர்பான தீர்மானத்தின் மீது விவாதம் நடைபெற்றது. விவாதத்திற்குப் பின்னர் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த தீர்மானம், நிறைவேறியதை அடுத்து, மஹுவா மொய்த்ரா எம்.பி. பதவி பறிக்கப்படுவதாக சபாநாயகர் ஓம் பிர்லா அறிவித்தார். தீர்மானத்தைக் கண்டித்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் வெளிநடப்பு செயதனர். அத்துடன் தங்களது கண்டனத்தையும் பதிவுசெய்துள்ளனர்.
பின்னர் இதுகுறித்து நாடாளுமன்றத்திற்கு வெளியே செய்தியாளர்களிடம் பேசிய மஹுவா, “முழுமையான விசாரணை நடத்தப்படாமல் என்மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதானி என்ற ஒருவருக்காக ஒட்டுமொத்த அரசும், இயங்கி வருகிறது. அதானி மீது மக்கள் மன்றத்தில் வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. மாறாக, அதானியைக் காப்பாற்றும் நடவடிக்கையை மத்திய அரசு மேற்கொள்கிறது. தொடர்ந்து அடக்குமுறையை மேற்கொண்டு வரும் பாஜக அரசின் முடிவுகாலம் நெருங்கிவிட்டது” என கடும் ஆவேசத்துடன் தெரிவித்தார்.
இந்த நிலையில் மஹுவாவின் பதவி நீக்கத்திற்கு மேற்குவங்க முதல்வரும் திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி தனது கண்டனத்தைப் பதிவுசெய்துள்ளார். இதுகுறித்து அவர், “இது பாஜகவின் பழிவாங்கும் அரசியல் நடவடிக்கை. அவர்கள் ஜனநாயகத்தை கொன்றுள்ளனர். இது அநீதி. போரில் மஹுவா வெற்றிபெறுவார். பாஜகவுக்கு மக்கள் தகுந்த பதிலடி கொடுப்பார்கள். அடுத்த தேர்தலில் அவர்கள் தோற்கடிக்கப்படுவார்கள்” எனத் தெரிவித்துள்ளார்.
மேலும் அவர், “இது நாடாளுமன்ற ஜனநாயகத்திற்கு அவமானம். மஹுவா மொய்த்ரா வெளியேற்றப்பட்ட விதத்தை நாங்கள் கண்டிக்கிறோம். கட்சி அவருடன் துணை நிற்கிறது. பாஜகவால் தேர்தலில் எங்களைத் தோற்கடிக்க முடியாது. எனவே அவர்கள் பழிவாங்கும் அரசியலில் இறங்கியுள்ளனர். இது வருத்தமளிக்கிறது. மொய்த்ரா ஒரு பெரிய பலத்துடன் மீண்டும் நாடாளுமன்றத்திற்குத் திரும்புவார். தம்மிடம் பெரும்பான்மையான ஆதரவு இருப்பதால் என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என பாஜக நினைக்கிறது. அவர்கள் ஆட்சியில் இல்லாத ஒருநாள் வரக்கூடும் என்பதை அவர்கள் மனதில்கொள்ள வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, இந்த விவகாரம் நாடு முழுவதும் பேசுபொருளாகிய நிலையில், அதற்கு திரிணாமுல் காங்கிரஸைச் சார்ந்த யாரும் பதிலளிக்காமல் இருந்தது கடும் விமர்சனத்தை ஏற்படுத்தியது. இதனால் மஹுவா மொய்தா, கட்சியில் இருந்து ஓரங்கட்டப்படுகிறாரா என்ற கேள்வியும் எழுந்தது. அந்தச் சமயத்தில் அவருக்குப் புதிய பொறுப்பு வழங்கியதுடன் மம்தா பானர்ஜி, இந்த விவகாரத்திலும் ஆதரவுக்கரம் நீட்டியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.