தொடரும் மருத்துவர்களின் போராட்டம்.. பேச்சுவார்த்தைக்கு மம்தா அழைப்பு

தொடரும் மருத்துவர்களின் போராட்டம்.. பேச்சுவார்த்தைக்கு மம்தா அழைப்பு
தொடரும் மருத்துவர்களின் போராட்டம்.. பேச்சுவார்த்தைக்கு மம்தா அழைப்பு
Published on

மேற்கு வங்கத்தில் போராடும் பயிற்சி மருத்துவர்களை பேச்சுவார்த்தைக்கு அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி அழைத்துள்ளார்.

மேற்கு வங்க மாநிலத்தில் நில்ரதன் சர்கார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கடந்த திங்கள்கிழமை நோயாளியின் உறவினர் ஒருவர், பயிற்சி மருத்துவர் ஒருவரை தாக்கியதாகத் தெரிகிறது. இதில் அவர் தலையில் அடிபட்டு உயிரிழந்தார். இதனால் மருத்துவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யக்கோரியும் மருத்துவரின் இறப்புக்கு கண்டனம் தெரிவித்தும் ஐந்து நாட்களுக்கும் மேலாக பயிற்சி மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் இதுதொடர்பாக கொல்கத்தா உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்று விசாரணைக்கு வந்தது. அதில் நீதிபதி, எந்தவித உத்தரவையும் அளிக்காமல், போராட்டத்தில் ஈடுபடும் மருத்துவர்களிடம் மேற்கு வங்க அரசு பேச்சுவார்த்தை நடத்தவேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளது. இதனைத்தொடர்ந்து மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி மாநில தலைமை செயலகத்தில் ஒரு சில மருத்துவர்களிடம் ஆலோசனை நடத்தினார். அத்துடன் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பயிற்சி மருத்துவர்களுக்கும் இந்தக் கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டது. எனினும் அவர்கள் கலந்துகொள்ளவில்லை. 

இதனையடுத்து இன்று மாலை 5 மணிக்கு மீண்டும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பயிற்சி மருத்துவர்கள் பேச்சுவார்த்தை கூட்டத்தில் பங்கேற்குமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த விவகாரம் தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் ஹர்ஷ் வர்தன் மேற்கு வங்க முதல்வருக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார். அதில், “இந்த விவகாரத்தில் சரியான தகவல் பரிமாற்றம் இருக்கவேண்டும். மேலும் இவ்விகாரத்தில் கருணையுடன் கையாளவேண்டும்” என அறிவுறுத்தியுள்ளார். 

முன்னதாக கொல்கத்தாவில் நடக்கும் போராட்டத்திற்கு பிற மாநிலங்களில் ஆதரவு வலுத்துள்ளது. அத்துடன் இந்திய மருத்துவர்கள் சங்கமும் இப்போராட்டத்திற்கு ஆதரவு அளித்துள்ளது. மேலும் நாடு முழுவதும் உள்ள மருத்துவர்களை வரும் 17ஆம் தேதி போராட்டத்திற்கு அழைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com