மேற்குவங்கத்தில் ஒருநாள் முன்னதாகவே தேர்தல் பரப்புரையை முடித்துக் கொள்ள வேண்டும் என்ற தேர்தல் ஆணையத்தின் உத்தரவு அரசியல் சாசனத்துக்கு எதிரானது என திரிணாமுல் காங்கிரஸ் தலைவரும், அம்மாநில முதல்வருமான மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் பாஜக தலைவர் அமித்ஷா பங்கேற்ற தேர்தல் பரப்புரை பேரணியின் போது வன்முறை ஏற்பட்டது. இதில் திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் பாஜகவினர் இடையே ஏற்பட்ட மோதலில் இருசக்கர வாகனத்திற்கு தீ வைப்பு உள்ளிட்ட சம்பவங்கள் நடைபெற்றுள்ளன. இரு கட்சிகளை சேர்ந்த தொண்டர்கள் மோதலில் ஈடுபட்டதால் கூட்டத்தை கலைக்க போலீசார் தடியடி நடத்தினர். மேலும் விவேகனந்தா கல்லூரி வளாகத்தில் இருந்த, 19ம் நூற்றாண்டைச் சேர்ந்த கல்வியாளர் மற்றும் சமூக சீர்திருத்தவாதியான சந்திர வித்யாசகரின் சிலை உடைக்கப்பட்டது.இதனால் அங்கு பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது.
இதனால் மேற்கு வங்கத்தில் இன்று இரவு 10 மணியோடு தேர்தல் பரப்புரையை முடித்துக்கொள்ள வேண்டும் என அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் ஒருநாள் முன்னதாகவே தேர்தல் பரப்புரையை முடித்துக் கொள்ள வேண்டும் என்ற தேர்தல் ஆணையத்தின் உத்தரவுக்கு திரிணமுல் காங்கிரஸ் தலைவரும், அம்மாநில முதல்வருமான மம்தா பானர்ஜி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
கொல்கத்தாவில் உள்ள தமது இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், தேர்தல் ஆணையத்தின் இந்த முடிவு அரசியல்சாசனத்துக்கு எதிரானது என்றும், இதற்கு முன் இப்படியொரு முடிவு எடுக்கப்பட்டதில்லை என்றும் கூறினார்.தேர்தல் ஆணையம் பாஜகவுக்கு ஆதரவாகவும்,மற்றவர்களுக்கு ஒருதலைபட்சமாகவும் செயல்படுவதாக குற்றஞ்சாட்டிய மம்தா,ஒருநாள் முன்னதாகவே தேர்தல் பரப்புரையை முடித்துக் கொள்ளும் அளவுக்கு, மேற்குவங்கத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு போய்விடவில்லை என்று கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், வித்யாசாகர் சிலையை உடைத்ததற்கு பரிசளிக்கும் விதமாக பிரதமர் மோடிக்கும், அமித் ஷாவுக்கு, தேர்தல் ஆணையம் இப்படியொரு உத்தரவை பிறப்பித்துள்ளது. இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப் போவதாக மம்தா தெரிவித்தார். மேலும் அமித்ஷா நடத்திய பேரணியில் தான் வன்முறை வெடித்தது, இதற்காக அவர் மீது தேர்தல் ஆணையம் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.