புனேவில் உள்ள பென்ஸ் கார் தொழிற்சாலைக்குள் 3 வயது ஆண் சிறுத்தை நுழைந்தது. ஆறு மணி நேரப் போராட்டத்திற்கு பின் சிறுத்தையை பத்திரமாக வெளியேற்றினர் வனத்துறையினர்.
உணவு மற்றும் தண்ணீரை தேடி குடியிருப்புகளுக்குள் வன விலங்குகள் நுழைந்த சம்பவங்கள் பல உண்டு. ஆனால் முதன்முறையாக தொழிற்சாலைக்குள் அதிரடி விசிட் கொடுத்திருக்கிறது ஒரு சிறுத்தை. அதுவும் சாதாரண தொழிற்சாலை அல்ல! சொகுசு கார்களை தயாரிப்பதில் உலகளவில் முன்னணியில் இருக்கும் பென்ஸ் நிறுவனத்தின் தொழிற்சாலை அது! புனேவில் உள்ள அந்நிறுவனத்தின் 750 பேர் பணிபுரியும் உற்பத்தி தொழிற்சாலையில் நேற்று காலையில் தான் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.
இரவுப்பணி ஊழியர்கள் ஒவ்வொருவராக வெளியேறிக் கொண்டும், காலைப் பணி ஊழியர்கள் வந்து கொண்டும் இருந்த பரபரப்பான நேரம் அது. மிஷின் சத்ததுக்கு நடுவே உறுமல் சப்தமும் கேட்பதை ஊழியர்கள் சிலர் கவனித்துள்ளனர். ஏதேச்சையாக கவனித்த போதுதான் ஒரு ஊழியர் சிறுத்தை ஒன்று அங்குமிங்கும் செல்வதை பார்த்துள்ளார். அதிர்ந்து போன அவர் மேலாளரிடம் தகவலை தெரிவிக்க அவரும் சிறுத்தை சுற்றுவதை சிசிடிவி மூலம் உறுதி செய்தார். உடனடியாக தொழிற்சாலைக்கு ஒருநாள் விடுமுறை அறிவிக்கப்பட்டது. அனைத்து ஊழியர்களையும் உடனடியாக பல பேருந்துகளில் ஏற்றி அந்த பகுதியை விட்டு வெளியேற்றியது தொழிற்சாலை நிர்வாகம்.
வனத்துறைக்கு தகவல் அளித்ததும் அவர்கள் வந்து சிறுத்தையை பிடிக்கும் முயற்சியில் இறங்கினர். சிசிடிவி உதவியுடன் 6 மணி நேரம் போக்கு காட்டிய சிறுத்தையை மயக்க ஊசி செலுத்தி பிடித்து மீண்டும் வனப்பகுதிக்குள் விட்டனர் வனத்துறையினர். சிறுத்தைக்கு 3 வயது தான் இருக்கும் என்றும் வழிதவறியே தொழிற்சாலைக்குள் நுழைந்துள்ளது என்றும் வனத்துறையினர் தெரிவித்தனர். இதுதொடர்பாக பென்ஸ் நிர்வாகம் டிவிட்டரில் கிண்டலாக ஒரு பதிவையும் வெளியிட்டு இருந்தது. “நமது பென்ஸ் தொழிற்சாலைக்கு ஒரு சிறப்பு விருந்தினர் வந்திருக்கிறார். அது ஒரு ஆண் சிறுத்தை” என்று பதிவிட்டு இருந்தது.
இந்த சம்பவத்தில் யாருக்கும் எந்த காயமும் ஏற்படவில்லை. சிறுத்தை கோபத்தில் இல்லை என்பதாலும் ஊழியர்கள் தொந்தரவு செய்யாததாலும் காயம் ஏற்படுவதற்கான சூழல் ஏற்படவில்லை என்றும் வனத்துறை விளக்கம் அளித்துள்ளது.