மகாத்மா காந்தியை கோட்சேவை தவிர வேறுயாரும் சுட்டதற்கான ஆதாரங்கள் இல்லை என்று வழக்கறிஞர் அமரேந்தர் சரண் உச்சநீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்துள்ளார்.
நாடு சுதந்திரம் அடைந்த பின்னர் 1948-ம் ஆண்டு ஜனவரி 30-ம் தேதி மகாத்மா காந்தி சுட்டுக் கொல்லப்பட்டார். டில்லியில் ஒரு பிரார்த்தனைக் கூட்டத்தில் பங்கேற்ற காந்தியை நாதுராம் கோட்சே துப்பாக்கியால் சுட்டுக் கொன்றார். இந்த வழக்கை விசாரித்த டெல்லி மாவட்ட நீதிமன்றம் 1949-ம் ஆண்டு நவம்பர் 8 அன்று கோட்சேவுக்கு மரண தண்டணை விதித்தது. கோட்சேவுக்கு உதவிய நாராயண் அப்தேவுக்கும் மரணதண்டணை வழங்கப்பட்டது. இருவரும் அம்பாலா சிறையில் 1949 நவம்பர் 15 அன்று இறக்கும் வரை தூக்கிலிடப்பட்டனர்.
இந்த வழக்கு முடிவடைந்து 60 ஆண்டுகளுக்கு மேல் ஆன நிலையில், வழக்கை மீண்டும் விசாரிக்கக் கோரி மும்பையைச் சேர்ந்த பங்கஜ் பத்னீஸ் என்பவர் உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார். காந்தி கொலை வழக்கு விசாரணையில் பல குளறுபடிகள் நடைபெற்றுள்ளதாகவும், எனவே இவ்வழக்கை மறு விசாரணை செய்ய உத்தரவிட கோரியும் பங்கஜ் தனது மனுவில் வலியுறுத்தி இருந்தார். மேலும், காந்தியின் உடலில் நான்கு குண்டுகள் பாய்ந்துள்ளதாகவும், கோட்சே சுட்டது மூன்று குண்டுகளை மட்டுமே சுட்டார் என்றும் அந்த நான்காவது குண்டை சுட்டது யார் என்பது குறித்து தெரிய வேண்டும் என்றும் குறிப்பிட்டிருந்தார்.
இந்த வழக்கில் நீதிமன்றத்திற்கு உதவி செய்வதற்காக மூத்த வழக்கறிஞரும் மத்திய அரசின் முன்னாள் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரலுமான அமரேந்தர் சரணை நீதிபதிகள் நியமித்தனர். இந்நிலையில் வழக்கறிஞர் அமரேந்தர் சரண் தனது அறிக்கையை நீதிபதி போப்தே தலைமையிலான அமர்வு முன்பு இன்று தாக்கல் செய்தார். அவர் தமது அறிக்கையில், “மகாத்மா காந்தியை கோட்சேவை தவிர வேறு யாரும் சுட்டதற்கான ஆதாரமில்லை. இதனால், கொலை தொடர்பான மறு விசாரணை தேவை இல்லை”என்று குறிப்பிட்டிருந்தார்.