மகாராஷ்டிராவில் ஆம்புலன்ஸ் வசதி இல்லாததால், உடல்நலம் பாதித்த குழந்தைகளை பெற்றோர் 15 கிலோ மீட்டர் தூரத்திற்கு தோளில் தூக்கிச் சென்ற நிலையில், குழந்தைகள் இரண்டும் பரிதாபமாக உயிரிழந்தன.
கடந்த 4ஆம் தேதி கட்சிரோலி அருகே உள்ள பட்டிகாவோன் கிராமத்தில் 3 மற்றும் 6 வயதான இரு ஆண் குழந்தைகளுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. ஆனால் அவர்களது பெற்றோர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லாமல் ஒரு மதகுருவிடம் சென்றனர்.
அவர் அளித்த மூலிகை வைத்தியம் பலனளிக்காத நிலையில், குழந்தைகள் சுயநினைவை இழந்தனர். இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர், மகன்களை தோளில் சுமந்தவாறு 15 கிலோ மீட்டர் தொலைவில் ஜிம்லஹட்டா எனும் இடத்தில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சென்றனர்.
ஆம்புலன்ஸ், சாலை வசதி இல்லாததால், கற்களும் பாறைகளும் நிறைந்த பாதை வழியே நடந்தே சென்று ஆரம்ப சுகாதார நிலையத்தை அடைந்தனர். அங்கு இரு குழந்தைகளையும் பரிசோதித்த மருத்துவர்கள் அவர்கள் ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
பின்னர் உடல்களை எடுத்துச் செல்ல அங்கிருந்து ஆம்புலன்ஸ் ஏற்பாடு செய்யப்பட்டது. ஆனால், அதனை மறுத்த பெற்றோர், தங்களது மகன்களின் சடலங்களை சுமந்து சென்றபடி கண்ணீருடன் நடந்தே கிராமத்தை அடைந்தனர். இந்த விவகாரம் அதிர்வலையை ஏற்படுத்திய நிலையில், உரிய விசாரணை நடத்த மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.