இந்தியாவில் கொரோனா பாதிப்பின் தன்மையும் தீவிரமும் மாநிலங்களைப் பொறுத்து வேறுபடுகிறது. தமிழகத்தில் சென்னையில் பாதிப்பு குறைந்துவரும் நிலையில், மற்ற மாவட்டங்களில் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை தற்போது கூடிவருகிறது.
மகாராஷ்டிரா மாநிலத்தில் நேற்று ஒரே நாளி்ல் 10,576 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. அங்கு மொத்தம் 3,37,607 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதே நேரத்தில் நேற்று மட்டும் 5,552 பேர் நலமடைந்துள்ளார்கள் என்ற நம்பிக்கையான செய்தியும் உள்ளது. ஆசியாவின் பெரிய குடிசைப் பகுதியான தாராவி மீண்ட நிலையில், மற்ற பகுதிகளில் தொற்று வேகமாகப் பரவிவருகிறது.
ஒரு நாளில் 10 ஆயிரம் பேர் கொரோனா பாதிப்பை அடைந்த முதல் மாநிலமாக மகாராஷ்டிரா இருக்கிறது. இதனிடையே, கொரோனா தொற்று பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் 12,556 ஆக அதிகரித்திருக்கிறது. இதுவரை 1,87,769 பேர் நலமடைந்து வீடு திரும்பியுள்ளதாக மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. நோயத் தடுப்பு நடவடிக்கைகளில் அரசு தீவிர கவனம் செலுத்தி வருகிறது.