மஹாராஷ்டிராவில் மாணவர்களின் கல்விக்காக மரத்தில் ஏறி பாடம் நடத்திய ஆசிரியர் அனைவரின் பாராட்டையும் பெற்றுள்ளார்.
கொரோனாத் தொற்றுக் காரணமாக நாடு முழுவதிலும் உள்ள பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன. பெரும்பாலான இடங்களில் ஆன்லைன் வழியில் மாணவர்களுக்கான கல்வியானது கற்பிக்கப்பட்டு வருகிறது. வாழ்வாதாரம் இழந்த ஏழை எளிய மாணவர்கள், மலைப்பிரதேசப் பகுதிகளில் வசிக்கும் மாணவர்கள் என பலருக்கு இம்முறையிலான கல்வி கிடைப்பதில் பெருஞ்சிக்கல் நிலவுகிறது.
இருப்பினும் ஒவ்வொரு மாணவரும் இம்முறை கல்விக்கு எவ்வழியிலாவது தங்களைத் தயார்படுத்த கொள்ள முயற்சிக்கின்றனர். அதற்கு சில ஆசியர்கள் தங்களது தன்னலமில்லாச் சேவையை வழங்கி வருகின்றனர். அப்படி இங்கும் ஒரு ஆசிரியர் மாணவர்களுக்காக தனது ஒப்பற்றச் சேவையை வழங்கியிருக்கிறார்.
மஹாராஷ்டிரா மாநிலம் நந்துர்பார் மாவட்டம் தட்கான் கிராமத்தைச் சேர்ந்த ஆசிரியர் லக்ஷ்மண் பவார். இவர் தன்னிடம் படிக்கும் மாணவர்களுக்காக அவர்கள் தங்கி இருக்கும் இடத்திற்கேச் சென்று கல்வி கற்பிக்க முயன்றதாகத் தெரிகிறது. மாணவர்களுக்கு ஸ்மார்ட் போன் மூலமாக கல்வி கற்பிக்க முற்படும் போது அங்கு போதுமான சிக்னல் கிடைக்கவில்லை. இதனால் மாணவர்களை அழைத்துக்கொண்டு மரத்தின் மீது ஏறி விட்டார் லக்ஷ்மண். இது மட்டுமன்றி மலையின் உயர்ந்தப் பகுதிகளுக்கு அழைத்துச் சென்றும் பாடம் நடத்துகிறார். இவரது கல்விச்சேவை தற்போது அனைவரின் பாராட்டையும் பெற்றுள்ளது.
இது குறித்து துணை கல்வி இயக்குனர் நாசிக் பிரவீன் கூறும் போது “ அப்பகுதியில் குறைவான சிக்னல் வசதிகளே உள்ளன. அதனால் சிக்னல் கிடைக்கும் இடத்திற்கு மாணவர்கள் சென்று படிக்கின்றனர். இது மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் கல்வி மீதான அர்ப்பணிப்பைக் காட்டுகிறது.
கொரோனா பரவல் ஒரு சில விஷயங்களை உணர்த்தியிருக்கிறது. அதில் ஒன்று மாவட்டத்தில் உள்ள எல்லா கிராமங்களுக்கும் மிகச் சரியான செல்போன் சிக்னல்களை வழங்குவது. குறிப்பாக குழந்தைகளின் கல்விக்கு இவை மிகவும் முக்கியம்.”என்றார்.