மகாராஷ்டிரா தேர்தலில் களத்தில் பேசும் பெயரான சாவர்க்கர்...! 

மகாராஷ்டிரா தேர்தலில் களத்தில் பேசும் பெயரான சாவர்க்கர்...! 
மகாராஷ்டிரா தேர்தலில் களத்தில் பேசும் பெயரான சாவர்க்கர்...! 
Published on

மகாராஷ்டிரா சட்டப்பேரவைத் தேர்தலில் சாவர்க்கர் பெயர் முக்கியத்துவம் பெற்றுள்ளது.

மகாராஷ்டிரா சட்டப்பேரவைத் தேர்தல் களத்தில், இந்தமுறை பேசும் பெயராகி இருக்கிறார் சாவர்க்கர். சங் பரிவார் அமைப்பான ஆர்எஸ்எஸ் நிறுவனர்களில் ஒருவராக கருதப்படும் இவருக்கு பாரத ரத்னா விருது வழங்க மத்திய அரசிடம் வலியுறுத்தப்படும் என தனது தேர்தல் அறிக்கையில் பாரதிய ஜனதா தெரிவித்துள்ளது. இதையடுத்து, அகோலாவில் 16ஆம் தேதி பரப்புரை செய்த பிரதமர் மோடி, தேசியத்தை கட்டமைப்பதற்கு தனது கடைசி மூச்சு வரை வாழ்க்கையை அர்ப்பணித்தவர் சாவர்க்கர் என்று புகழ்ந்தார். ஆனால், ஒரு குடும்பத்தின் மீது அர்ப்பணிப்புடன் இருப்பதை தேசியம் என காங்கிரஸ் கருதி வந்ததாகவும் விமர்சித்தார்.

இதையடுத்து,  சாவர்க்கர் பெயர் மகாராஷ்டிரா தேர்தல் களத்தில் அனலை அதிகரித்தது. சாவர்க்கருக்கு மட்டும் ஏன் பாரத ரத்னா..? கோட்சேவுக்கும் ஏன் தரக்கூடாது என காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் மணிஷ் திவாரி கேள்வி எழுப்பினார். இதே கேள்வியை இந்திய கம்யூனிஸ்ட் தேசிய பொதுச் செயலாளர் டி.ராஜாவும் கிளப்பினார்.

இதற்கு பதிலளித்துள்ள பாஜக மூத்த தலைவர் ரவிசங்கர் பிரசாத், தனது குடும்ப உறுப்பினர்களுக்கு மட்டுமே உயரிய விருதை அளித்து வந்த காங்கிரஸ், தேச பக்தருக்கு பாரத ரத்னா அளித்து கவுரவிப்பதை எதிர்ப்பதில் ஆச்சரியமில்லை என்றார். ட்விட்டரில் பதிவிட்ட அவர்,  சாவர்க்கருக்கு பாரத ரத்னா வழங்கக் கோருவதில் காங்கிரசுக்கு என்ன பிரச்னை என்றும் கேள்வி எழுப்பினார்.

அடுத்ததாக, இந்த விஷயத்தை கையிலெடுத்த பாஜக தலைவர் அமித் ஷா, 1857ல் நடந்த முதலாவது சுதந்திரப் போர் என சாவர்க்கர் அறிவிக்காமல் இருந்திருந்தால், அதை வெறும் புரட்சியாகவே வெள்ளையர்கள் பார்த்திருப்பார்கள் என்று கூறினார். சுதந்திரப் போராட்டத்துக்கு அடித்தளம் அமைத்த  சாவர்க்கர் வரலாற்றை இந்திய கண்ணோட்டத்தில் இருந்து மீண்டும் எழுத வேண்டும் என்றும் அமித் ஷா தெரிவித்தார். மகாராஷ்டிரா சட்டப்பேரவைத் தேர்தல் பரப்புரையில் பல்வேறு பிரச்னைகள் குறித்து விவாதிக்கப்பட்டாலும், சாவர்க்கர் குறித்துப் பேசுவதே முக்கியத்துவம் பெற்றுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com