அதிருப்தி சட்டப்பேரவை உறுப்பினர்களின் தலைவர் ஏக்நாத் ஷிண்டேயின் கை நாளுக்குநாள் ஓங்கி வரும் நிலையில், மகாராஷ்டிரா அரசியல் குழப்பம் மேலும் சிக்கல் அடைந்து வருகிறது.
மும்பையில் முதலமைச்சர் உத்தவ் தாக்கரே மற்றும் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் உள்ளிட்டோர் மகா விகாஸ் ஆகாடி அரசை காக்க தொடர் ஆலோசனைகளில் ஈடுபட்டுவரும் நிலையில், அதிருப்தி சட்டப்பேரவை உறுப்பினர்கள் முகாம், அசாம் தலைநகர் குவஹாத்தியில் தொடர்ந்து விரிவடைந்து வருகிறது.
மேலும் சில சிவசேனா சட்டப்பேரவை உறுப்பினர்கள் ஏக்நாத் ஷிண்டே முகாமில் இணைந்துள்ள நிலையில், சிவா சேனா கட்சியை உடைக்கும் பலம் அவர்களுக்கு கிட்டியுள்ளதாக மகாராஷ்டிரா அரசியல் வட்டாரங்களில் பரபரப்பாக பேசப்படுகிறது. கட்சித்தாவல் சட்டத்தின் கீழ் பதவி இழப்பை தவிர்க்க, 37 சிவசேனா சட்டப்பேரவை உறுப்பினர்கள் ஷிண்டே முகாமில் இருக்க வேண்டும் என்கிற நிலையில், தற்போது 38 சிவசேனா சட்டப்பேரவை உறுப்பினர்கள் குவஹாத்தியில் உள்ளனர் என ஷிண்டே ஆதரவாளர்கள் தெரிவித்துள்ளனர்.
அதிருப்தியில் ஈடுபட்டுள்ள சிவசேனா சட்டப்பேரவை உறுப்பினர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து, மகா விகாஸ் அகாடி கூட்டணி அரசு பெரும் சிக்கலில் தத்தளிக்கிறது என்றாலும் உத்தவ் தாக்கரே ராஜினாமா செய்ய மாட்டார் என சிவசேனா தலைவர்கள் தெரிவித்துள்ளனர். சுயேச்சைகளையும் சேர்த்து தன்னுடன் 50 சட்டப்பேரவை உறுப்பினர்கள் உள்ளதாகவும், பெரும்பாலான சிவசேனா சட்டமன்ற உறுப்பினர்களின தங்களை ஆதரிப்பதாகவும், ஷிண்டே ஆதரவாளர்கள் தெரிவித்துள்ளனர். மகா விகாஸ் ஆகாடி அரசுக்கு பெரும்பான்மை இல்லை என்றும், தங்களை சட்டப்பேரவையில் தனி குழுவாக அங்கீகரிக்க வேண்டும் எனவும் அவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
மேலும் பல சட்டப்பேரவை உறுப்பினர்கள் தங்களுடன் இணைய உள்ளதாக அதிருப்தி எம்.எல்.ஏக்களின் குழுவின் தலைவரான ஏக்நாத் ஷிண்டே தெரிவித்துள்ளார். சட்டப்பேரவையில் பலப்பரீட்சை மற்றும் சட்டரீதியான நடவடிக்கைகள் அடுத்த கட்டமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. சிவசேனா தலைமை ஷிண்டே ஆதரவு சட்டப்பேரவை உறுப்பினர்களில் பலரை இடைநீக்கம் செய்ய நடவடிக்கை எடுத்துள்ளது.
அதிருப்தி சிவசேனா சட்டப்பேரவை உறுப்பினர்களை சமாதானப்படுத்தும் முயற்சியில் வெற்றி கிடைக்காத நிலையில், முதலமைச்சர் உத்தவ் தாக்கரே காணொளி மூலம் சிவசேனா தொண்டர்களுடன் உரையாடினார். ஷிண்டே ஆதரவாளர்கள் கட்சிக்கும் துரோகம் செய்துவிட்டதாக அவர் குற்றம்சாட்டினார். அதே சமயத்தில் சிவசேனா தலைவர்கள் மகா விகாஸ் ஆகாடி கூட்டணியை விட்டு விலக தயார் என்றும், அதிருப்தி சட்டப்பேரவை உறுப்பினர்கள் மும்பை திரும்ப வேண்டும் எனவும் வலியுறுத்தி வருகின்றனர்.
உத்தவ் தாக்கரே ராஜினாமா செய்யக் கூடாது என கூட்டணிக் கட்சிகள் வலியுறுத்தியதாக சிவசேனா கட்சித் தலைவர்கள் தெரிவித்தனர். இறுதிவரை போராட்டம் நடைபெறும் எனவும் அவர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். இதற்கிடையே ஷிண்டே ஆதரவாளர்கள் மகாராஷ்டிரா மாநிலத்தில் பல இடங்களில் சுவரொட்டிகள் மற்றும் பதாகைகள் மூலம் ஏக்நாத் ஷிண்டேவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர். சில இடங்களில் ஷிண்டே ஆதரவாளர்களின் பதாகைகள் சேதப்படுத்தப்பட்டதாகவும் தகவல் வந்துள்ளது.
சிவசேனா தொண்டர்களின் கோபம் கடுமையாக இருக்கும் என சிவேசேனா செய்தித்தொடர்பாளர் சஞ்சய் ராவத் பேசி உள்ளது, வன்முறை வெடிக்குமோ என்கிற அச்சத்தை உண்டாக்கியுள்ளது. இதனால்தான் ஷிண்டே ஆதரவாளர்கள் மும்பை திரும்பவில்லை என பேசப்படுகிறது. சட்டப்பேரவையில் பலப்பரீட்சையே இந்த இழுபறிக்கு தீர்வாக இருக்கும் என மகாராஷ்டிரா அரசியல் தலைவர்கள் கருதுகிறார்கள். அவ்வாறு பலப்பரீட்சை நடந்தால், பாரதிய ஜனதா கட்சியின் நிலைப்பாடும் தெளிவாக தெரிந்துவிடும்.
- டெல்லியிலிருந்து கணபதி சுப்பிரமணியம்