மகாராஷ்டிராவில் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த விதிக்கப்பட்டுள்ள தடை இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது.
மகாராஷ்டிராவில் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த தடை விதிக்கப்படுவதாக கடந்த மார்ச் 23-ஆம் தேதி அறிவிப்பு வெளியானது. சுற்றுச்சூழலை பாதுகாக்கும் பொருட்டும், மாசுபாட்டை குறைக்கும் பொருட்டும் இந்த நடவடிக்கையை மகாராஷ்டிரா அரசு மேற்கொண்டது. இந்நிலையில் இந்த உத்தரவு இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது.
இதன் மூலம் பிளாஸ்டிக் பொருட்கள் தயாரிப்பு, பயன்பாடு, விற்பனை, விநியோகம், ஆகியவை தடை செய்யப்படுகிறது. இருப்பினும் பால் மற்றும் திடக் கழிவு, மருந்துப் பொருட்களுக்கான பேக்கிங் ஆகியவற்றிற்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. தடை உத்தரவை மீறுபவர்களுக்கு கடுமையான தண்டனை விதிக்கப்படும் என மாநில சுற்றுச்சூழல் துறை அமைச்சர் ராம்தாஸ் காதம் தெரிவித்துள்ளார்.
பிளாஸ்டிக் தடையை முதல்முறை மீறுபவர்களுக்கு ரூபாய் 5,000 அபராதம் விதிக்கப்படும். இரண்டாவது முறை மீறுபவர்களுக்கு ரூபாய் 10,000, மூன்றாவது முறையாக அவர் மீண்டும் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துவது கண்டுபிடிக்கப்பட்டால் அவருக்கு ரூபாய் 25,000 அபராதத்துடன் மூன்று மாத சிறைத்தண்டனை கொடுக்கப்படும். பிளாஸ்டிக் தடையை மக்கள் முறையாக பின்பற்றுகிறார்களா என்பதை கண்காணிக்க குழு ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது.