மகாராஷ்டிரா மாநிலம் நாந்தேட் நகரில் அமைந்துள்ளது ஷங்கர் ராவ் சவான் அரசு மருத்துவமனை. இந்த மருத்துவமனையில், கடந்த அக்டோபர் 2ஆம் தேதி அன்று, ஒரேநாளில், அதாவது 24 மணி நேரத்தில் 24 பேர் உயிரிழந்தனர். தொடர்ந்து அம்மருத்துவமனையில் மேலும் 7 பேர் உயிரிழந்ததை அடுத்து இந்த எண்ணிக்கை 31 ஆக அதிகரித்தது. கடந்த 48 மணி நேரத்தில் 31 பேர் உயிரிழந்தனர். இவர்களில் 16 பேர் குழந்தைகள். இந்த உயிரிழப்புக்கு மருந்துப் பொருட்களின் பற்றாக்குறையே காரணம் என்ற குற்றச்சாட்டும் எழுந்தது.
இந்த நிலையில், அம்மருத்துவமனையின் டீன் மருத்துவர் ஷ்யாம் ராவ் வகோடேவை கழிவறையை சுத்தம் செய்யும் காட்சிகள் அடங்கிய வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. அதனைத் தொடர்ந்து அவர் கொடுத்த புகாரின் பேரில் முதல்வர் ஏக்நாத் ஷிண்டே அணியினைச் சேர்ந்த எம்.பி. ஹேமந்த் பாட்டீல் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
இதையும் படிக்க: டெல்லி: ஆம் ஆத்மி எம்.பி. சஞ்சய் சிங் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை!
முன்னதாக எம்.பி. ஹேமந்த் பாட்டீல், டீன் வகோடேவை அரசு மருத்துவமனையின் அசுத்தமான கழிவறை மற்றும் சிறுநீர் கழிக்கும் அறைகளை கட்டாயப்படுத்தி சுத்தம் செய்யவைத்தார். அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.
வீடியோவில் மருத்துவமனை டீனிடம் துடைப்பத்தைக் கொடுத்து கழிவறையை சுத்தம் செய்ய கட்டாயப்படுத்தும் பாட்டீல், ’இங்கு ஒரு சிறிய தண்ணீர் கோப்பைகூட இல்லை. ஆனால் கழிவறையைப் பயன்படுத்தாதவர்களை நீங்கள் திட்டுகிறீர்கள். உங்கள் வீட்டிலும் இப்படித்தான் நடந்துகொள்வீர்களா’ என்று கேட்பது பதிவாகியுள்ளது.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய எம்.பி. ஹேமந்த் பாட்டீல், ’அரசு கோடிக்கணக்கான ரூபாயைச் செலவு செய்கிறது. ஆனால் அரசு மருத்துவமனையில் உள்ள சூழலைப் பார்த்து நான் மிகவும் வேதனை அடைந்தேன். கழிவறைகள் பல மாதங்களாக சுத்தம் செய்யப்படவில்லை. மருத்துவமனை வார்டுகளில் இருக்கும் கழிப்பறைகள் பூட்டப்பட்டுள்ளன. தண்ணீரும் வரவில்லை’ எனத் தெரிவித்தார்.
இதையும் படிக்க: வந்தே பாரத் ரயிலில் இவ்வளவு வசதிகளா? - படங்களை வெளியிட்ட அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ்
எம்.பியின் இந்தச் செயலை மகாராஷ்டிரா மாநில மருத்துவர்கள் சங்கம் கண்டித்துள்ளது. இதுகுறித்து அது வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், "அனைவரின் முன்னிலையில் மருத்துவமனை டீன் கழிப்பறையை சுத்தம் செய்ய கட்டாயப்படுத்தப்பட்டு உள்ளார். அரசியல் ஆதாயத்துக்காக ஊடங்களில் முன்னிலையில் இது நிகழ்த்தப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவத்தினைத் தொடர்ந்து மருத்துவர்களும், மருத்துவக்கல்லூரி நிர்வாகத்தின் தலைமைப்பொறுப்பில் இருப்பவர்களும் நம்பிக்கையற்றும், மிகுந்த விரக்தியிலும் உள்ளனர்” எனத் தெரிவித்துள்ளது.
இதையும் படிக்க: ”தொந்தரவு செய்யாதீர்கள்” - வேண்டுகோள் விடுத்த விராட் கோலி, அனுஷ்கா சர்மா!