மஹாராஷ்டிர மாநிலம் தானேவில் 25 வயது இளைஞர் ஒருவர் ஆன்லைனில் 46 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள ஐ ஃபோனை ஆர்டர் செய்துள்ளார். அந்த ஆர்டர் கடந்த நவம்பர் 9 ஆம் தேதி அவருக்கு கிடைக்கப்பெற்றுள்ளது. ஆனால் பார்சலை திறந்துபார்த்த போது அவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. காரணம், பார்சலில் பாத்திரங்களை விளக்கும் 3 சோப்புகள் மட்டுமே இருந்துள்ளன.
ஜெராக்ஸ் எடுக்கும் கடையில் பணிபுரியும் அந்த இளைஞருக்கு நடந்துள்ள இச்சம்பவம் பலரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. உடனடியாக காவல்துறையிடம் இச்சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட நபர் புகார் அளித்துள்ளார். இது குறித்து வழக்குபதிவும் செய்யப்பட்டுள்ளது.
காவல்துறை அதிகாரிகள் இதுகுறித்து கூறுகையில், “ஆர்டர் செய்யப்பட்ட பார்சல் இடையில் யாரோ ஒருவரால் சேதப்படுத்தப்பட்டதால் ஆர்டர் செய்தவர் ஏமாற்றமடைந்துள்ளார்” என தெரிவித்துள்ளனர். நவம்பர் 11 ஆம் தேதி அடையாளம் தெரியாத அந்த குற்றவாளிக்கு எதிராக 420 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.