மகாராஷ்ட்ராவில் பாயும் காட்டாற்று வெள்ளத்தில் சம்மர்சாட் பல்டி அடித்த இளைஞர் மாயமானதை அடுத்து அவரை தேடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
மகாராஷ்ட்ரா மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக கனமழை பெய்து வருகிறது. இதனால் அங்குள்ள பெரும்பாலான மாவட்டங்கள் வெள்ளத்தில் தத்தளித்து வருகின்றன. குறிப்பாக, நாஷிக், புனே உள்ளிட்ட மாவட்டங்களில் இடைவிடாமல் பலத்த மழை பெய்வதால் அங்குள்ள ஆறுகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. இதுவரை அம்மாநிலத்தில் வெள்ளத்துக்கு 84-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். மாநிலம் முழுவதும் ஆயிரக்கணக்கான முகாம்கள் அமைக்கப்பட்டு அங்கு மக்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இன்னும் ஒரு வாரத்துக்கு மகாராஷ்டிராவில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், நாஷிக் மாவட்டம் மாலேகான் பகுதியில் உள்ள கிர்னா நதியில் தொடர் மழையால் நேற்று மாலை காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டது. இதனை அங்கிருந்த பாலம் ஒன்றில் இருந்து மக்கள் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு நின்றுக் கொண்டிருந்த ஒரு இளைஞர், ஆர்வமிகுதியில் திடீரென பாலத்தில் இருந்து ஆற்றில் குதித்தார். இதில் அவர் வெள்ளத்தில் வேகமாக அடித்துச் செல்லப்பட்டார். சிறிது தூரம் சென்றதும் அவர் மாயமானார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. விசாரணையில் அவர் மாலேகானைச் சேர்ந்த நயீம் ்அமீன் (23) என்பது தெரியவந்தது.
இதுகுறித்து தகவலறிந்த தீயணைப்புப் படையினர் அவரை தேடி வருகின்றனர்.