மகாராஷ்டிராவில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்போகும் இடைக்கால சபாநாயகர் யார் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
மகாராஷ்டிரா சட்டப்பேரவையில் நாளை மாலை 5 மணிக்குள் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்துமாறு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில், சபாநாயகர் பதவிக்கு ஆறு பேரின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது. அதிகமுறை வெற்றி பெற்ற மூத்த எம்.எல்.ஏக்களில் ஒருவரை இடைக்கால சபாநாயகராக நியமிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மகாராஷ்டிரா சட்டமன்றத்தில், காங்கிரஸின் பாலாசாகேப் தோரத் மற்றும் பாரதிய ஜனதாவின் காளிதாஸ் கோலம்ப்கர் ஆகிய இருவர் மூத்த எம்எல்ஏக்கள் ஆவர். இருப்பினும் 6 பேர் கொண்ட பட்டியலை ஆளுநரிடம் சட்டப்பேரவை செயலாளர் வழங்கியுள்ளதாக தெரிகிறது. பாரதிய ஜனதாவைச் சேர்ந்த மூன்று பேர் பரிந்துரைப்பட்டியலில் உள்ளனர்.
ராதாகிருஷ்ணா பாட்டீல், காளிதாஸ் கோலாம்ப்கர், பாபன்ராவ் பிகாஜி பச்புட் ஆகியோர் பாரதிய ஜனதாவின் தரப்பில் உள்ளனர். காங்கிரஸ் தரப்பில் பாலாசாகேப் தோரத் மற்றும் கே.சி பத்வி ஆகியோர் உள்ளனர். தேசியவாத காங்கிரஸ் தரப்பில் திலீப் வால்ஸ் பாட்டீல் இடம்பெற்றுள்ளார். இன்று மாலை 6 மணிக்குள் தற்காலிக சபாநாயகர் பதவியேற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. நாளை நம்பிக்கை வாக்கெடுப்புக்கு முன்பாக, அனைத்து எம்எல்ஏக்களும் பதவிப் பிரமாணம் செய்வார்கள். பிறகு விவாதம் ஏதும் நடத்தாமல், உடனடியாக நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறும் என கூறப்படுகிறது.
தேவேந்திர பட்னாவிஸ் மற்றும் அஜித் பவார் தங்களுடைய பதவிகளை ராஜினாமா செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளதால், நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு நடக்குமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.