மகாராஷ்டிராவில் பாரதிய ஜனதா ஆட்சி அமைத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் இணைந்து தாக்கல் செய்த மனுவை உச்சநீதிமன்றம் இன்று காலை 11.30 மணிக்கு விசாரிக்க உள்ளது.
மகாராஷ்டிராவில் ஒரே இரவில் அதிரடியான அரசியல் மாற்றங்கள் நிகழ்ந்ததை தொடர்ந்து, அடுத்தக் கட்ட நடவடிக்கை எடுப்பது தொடர்பாக தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் தலைமையில், மும்பையில் அவசர ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில், தேசியவாத காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 50 எம்எல்ஏக்கள் கலந்து கொண்டதாக கூறப்படுகிறது. அப்போது பாரதிய ஜனதா ஆட்சி அமைக்க உதவிய அஜித் பவாரை கட்சியின் சட்டப்பேரவை குழுத் தலைவர் பதவியிலிருந்து நீக்குவதற்கான முடிவு எடுக்கப்பட்டது. இந்தத் தகவலை தேசியவாத காங்கிரஸ் வட்டாரங்கள் உறுதி செய்துள்ளன.
இதனிடையே மகாராஷ்டிராவில் பாஜகவை ஆட்சியமைக்க அனுமதித்ததில் ஆளுநர் பகத் சிங் கோஷ்யாரி ஒருதலைபட்சமாக முடிவெடுத்திருப்பதாக கூறி, சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டது. மேலும் பேரவையில் உடனடியாக நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த பாஜக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்றும், வாக்கெடுப்பை வீடியோ பதிவு செய்ய வேண்டும் எனவும் மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்நிலையில் இந்த மனுவை இன்று காலை 11.30 மணிக்கு உச்ச நீதிமன்றம் விசாரணைக்கு எடுத்துக் கொள்ள உள்ளது. நீதிபதிகள் என்.வி.ரமணா, அசோக் பூஷண், சஞ்ஜீவ் கண்ணா ஆகியோர் அடங்கிய அமர்வு மனுவை விசாரிக்க உள்ளது. இதனிடையே குதிரை பேரம் நடப்பதை தடுக்க கூவத்தூரை போன்று, தேசியவாத காங்கிரஸ் எம்எல்ஏக்கள் நேற்றிரவு சொகுசுப் பேருந்தில் அழைத்துச் செல்லப்பட்டு மும்பையில் உள்ள நட்சத்திர ஓட்டலில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.