மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே மற்றும் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட 8 எம்.எல்.சி.க்கள் இன்று மதியம் 1 மணிக்கு சட்ட மேலவை உறுப்பினர்களாக பதவியேற்க உள்ளனர்.
சிவசேனா தலைவரான உத்தவ் தாக்கரே கடந்த நவம்பர் 28-ஆம் தேதி மகாராஷ்டிர முதலமைச்சராகப் பதவியேற்றார். இவர் சட்டமன்ற உறுப்பினராகவோ அல்லது சட்ட மேலவை உறுப்பினராகவே இல்லை. இதனால் சட்ட மேலவைக்குத் உறுப்பினராக தேர்வாகி உத்தவ் தாக்கரே முதல்வராகத் தொடர்வார் எனக் கணிக்கப்பட்டது. ஆனால் கொரோனா பிரச்னை காரணமாக மேலவைத் தேர்தல் நடைபெறுமா என சந்தேகம் எழுந்தது.
பதவியேற்ற ஆறு மாதத்திற்குள் அதாவது வரும் மே 28-க்குள் மேலவை அல்லது பேரவைக்குத் தேர்வாக முடியாத நிலையில் உத்தவ் தாக்கரேவின் முதலமைச்சர் பதவி பறிபோகும் நிலை ஏற்பட வாய்ப்பு இருந்தது.
இதனைத்தொடர்ந்து மகாராஷ்டிராவில் சட்ட மேலவைத் தேர்தல் நடத்த தேர்தல் ஆணையம் முடிவு செய்தது. வரும் மே 21-ஆம் தேதி தேர்தல் நடத்தலாம் என தேர்தல் ஆணையம் முடிவு செய்திருந்தது. இந்த தேர்தலில் உத்தவ் தாக்கரே தவிர சிவசேனா சார்பில் நீலம் கோரே, பாரதிய ஜனதா சார்பில் ரஞ்சித்சிங் மோகிதே பாட்டீல், கோபிசந்த் படல்கர், பிரவீன் தட்கே, ரமேஷ் கராத், தேசியவாத காங்கிரசின் சசிகாந்த் ஷிண்டே, அமோல் மித்காரி, காங்கிரசின் ராஜேஷ் ரத்தோடு ஆகிய 9 பேர் மட்டுமே வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டதால் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர்.
இந்நிலையில், மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே மற்றும் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட 8 எம்.எல்.சி.க்கள் இன்று மதியம் 1 மணிக்கு சட்ட மேலவை உறுப்பினர்களாக பதவியேற்க உள்ளனர்.