குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவில் மாற்றங்கள் செய்யாவிடில் ஆதரவு அளிக்க முடியாது என்று மகாராஷ்டிரா முதலமைச்சர் உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார்.
ஆப்கானிஸ்தான், வங்கதேசம் மற்றும் பாகிஸ்தான் நாடுகளில் இருந்து இந்தியாவில் தஞ்சம் அடையும் இந்து, கிறிஸ்தவர், ஜைனர், சீக்கியர், புத்த மதத்தவர்களுக்கு நிரந்தர குடியுரிமை வழங்க வகைசெய்யும் குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவை மக்களவையில் உள்துறை அமைச்சர் அமித்ஷா நேற்று தாக்கல் செய்தார்.
முதலில் இம்மசோதாவை அறிமுகப்படுத்துவதா? வேண்டாமா? என்பது குறித்த வாக்கெடுப்பில் அதிமுக, சிவசேனா உள்ளிட்ட 293 எம்.பி.க்கள் ஆதரவாகவும், திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட 83 எம்.பி.க்கள் எதிராகவும் வாக்களித்தனர். பின்னர், மசோதா மீது காரசாரமான விவாதம் நடைபெற்றது. நள்ளிரவு வரை விவாதம் நடைபெற்று, மக்களவையில் மசோதா நிறைவேறியது. இந்த மசோதாவுக்கு மகாராஷ்டிராவில் காங்கிரஸ் உடன் கூட்டணியில் இருக்கும் சிவசேனாவின் 17 எம்பிக்கள் ஆதரவு தெரிவித்தனர்.
இந்நிலையில், குடியுரிமை சட்டத் திருத்த மசோதவை எதிர்ப்பவர்களை தேசத் துரோகிகள் என கூறுவதா என்று உத்தவ் தாக்கரே கேள்வி எழுப்பியுள்ளார். மசோதாவில் மாற்றங்கள் செய்யாவிடில் ஆதரவு அளிக்க முடியாது என்றும் உத்தவ் தாக்கரே கூறியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், “இந்த மசோதாவை கண்டு நாட்டின் ஏதேனும் ஒரு குடிமகன் அச்சம் கொண்டாலும் அவர்களின் சந்தேகங்களை நிவர்த்தி செய்யப்பட வேண்டும்.
அவர்கள் நம்முடைய குடிமக்கள். அவர்களின் கேள்விகளுக்கு நாம் பதில் சொல்ல வேண்டும். நாங்கள் சில திருத்தங்களை கோரியுள்ளோம். அதனை மாநிலங்களவையில் எதிர்கொள்வோம். பாஜகவுக்கு மட்டுமே நாட்டின் மீது அக்கறை இருக்கிறது என்பது மாயையே” என்றார்.