போலீசாரின் எச்சரிக்கையையும் மீறி ஆபத்தான பகுதியில் செல்ஃபி எடுத்ததாக எழுந்த புகாரை அடுத்து மன்னிப்புக் கேட்டுள்ளார், மகாராஷ் ட்ரா முதலமைச்சர் மனைவி அம்ருதா.
மும்பை- கோவா இடையே ’அங்கிரியா’ என்ற சொகுசு கப்பல் கடந்த 20 ஆம் தேதி முதல் இயக்கப்படுகிறது. இந்தியாவின் முதல் சொகுசு கப்பலான இதன் பயணத்தை மத்திய அமைச்சர் நிதின் கட்கரி மற்றும் மகாராஷ்டிர முதலமைச்சர் தேவேந்திர ஃபட்னாவிஸ் உள்ளிட்டோர் 20-ம் தேதி தொடங்கிவைத்தனர்.
இதில் முதலமைச்சர் தேவந்திர பட்னாவிசின் மனைவி அம்ருதாவும் கலந்து கொண்டார். பாதுகாப்பை மீறி கப்பலின் முனைக்கு சென்ற அவர் செல்ஃபி எடுத்துள்ளார். காவல்துறை அதிகாரிகள் எச்சரிக்கையையும் மீறி முதல்வரின் மனைவி செல்ஃபி எடுத்தது சர்ச்சையை ஏற்படுத்தியது.
அவர் இதுபோன்று ஆபத்தான முறையில் செல்ஃபி எடுப்பதை வாடிக்கையாக கொண்டவர் என்றும் கூறப்படுகிறது.இந்த வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவியது. இதைப்பார்த்த பலரும் அம்ருதாவை கண்டித்தனர். இந்நிலையில் அம்ருதா மன்னிப்பு கேட்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் அளித்த பேட்டியில், ‘நான் செல்ஃபி எடுத்த பகுதி ஆபத்து இல்லாத இடம்தான். ஏனெனில் அதற்கு கீழே மேலும் 2 படிகள் இருந்தன. எனினும் இதில் நான் தவறு செய்திருப்பதாக யாராவது நினைத்தால், அதற்காக மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்’ என்று தெரிவித்துள்ளார்.