மகாராஷ்டிரா மற்றும் ஜார்க்கண்ட் ஆகிய மாநிலங்களுக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. மகாராஷ்டிராவில் பாஜக துணையுடன் சிவசேனாவில் இருந்து பிரிந்த ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. 288 சட்டமன்ற உறுப்பினர்களைக் கொண்ட மகாராஷ்டிர சட்டப்பேரவையின் 5 ஆண்டு பதவிக்காலம் வருகிற நவம்பர் மாதம் 26-ஆம் தேதியுடன் நிறைவடைய உள்ளது.
இதையடுத்து, அம்மாநிலத்தில் சட்டப்பேரவைத் தேர்தலை நடத்த தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது. அதன்படி நவம்பர் 20ஆம் தேதி ஒரேகட்டமாக மகாராஷ்டிரா தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. நவம்பர் 23ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் எனவும் அது தெரிவித்துள்ளது. இதையடுத்து அங்கு தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. இந்த தேர்தலில் காங்கிரஸ் அங்கம் வகிக்கும் மகா விகாஸ் அகாடிக்கும், பாஜக அங்கம் வகிக்கும் மஹாயுதி கூட்டணிக்கும் கடுமையான போட்டி நிலவுகிறது.
இந்த நிலையில், பாஜகவைச் சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் ராவ்சாகேப் தன்வே, புகைப்படம் எடுக்கும்போது தொண்டர் ஒருவரை காலால் எட்டி உதைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சிவசேனா தலைவரும், முன்னாள் அமைச்சருமான அர்ஜுன் கோட்கரை, பாஜகவைச் சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் ராவ்சாகேப் தன்வே இன்று மகாராஷ்டிர மாநிலம் ஜல்னா நகரில் சந்தித்துப் பேசினார். அப்போது இருவரும் ஒன்றாகச் சேர்ந்து புகைப்படம் எடுத்துக்கொண்டனர். அப்போது தன்வே பக்கத்தின் நின்ற கட்சி ஊழியர் ஒருவரை, தன்வே கோபத்தில் எட்டி உதைத்து அங்கிருந்து நகரும்படி கூறினார். இதுதொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த சம்பவத்திற்கு பயனர்கள் பலரும் எதிர்வினையாற்றி வருகின்றனர்.
பயனர் ஒருவர், “இந்தச் செயலால் மாநிலம் முழுவதும் உள்ள பல பிஜேபி, ஆர்எஸ்எஸ் ஆதரவாளர்கள் மிகவும் வேதனையடைந்துள்ளனர். மேலும் அவர்கள் தேர்தல் நாளில் பிஜேபிக்கு தங்கள் இடத்தைக் காட்ட முடிவுசெய்துள்ளனர்” எனத் தெரித்துள்ளார். இன்னொருவரோ, “இது, தன்வேயின் வெட்கக்கேடான செயல். அவர் சாமானியரை உதைக்கும் விதத்தில், பாஜகவையும் மகாராஷ்டிராவில் இருந்து வெளியேற்ற வேண்டும். மனிதர்களுக்கு மரியாதை இல்லை” எனப் பதிவிட்டுள்ளார்.