மகாராஷ்டிரா மாநிலத்தில் கடந்த நவம்பர் 20ஆம் தேதி, ஒரேகட்டமாக 288 தொகுதிகளைக் கொண்ட மகராஷ்டிரா சட்டப்பேரவைக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. இந்த நிலையில், மகாராஷ்டிரா மாநிலத்தில் தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று (நவ.23) நடைபெற்று வருகிறது. அதன்படி, பாஜக அங்கம் வகிக்கும் மஹாயுதி கூட்டணி அமோக வெற்றிபெற்றுள்ளது. தற்போது வரை அக்கூட்டணி 220க்கும் மேற்பட்ட இடங்களில் முன்னிலையில் உள்ளது. இந்தக் கூட்டணியில் பாஜக, முதல்வர் ஏக்நாத் ஷிண்டேவின் சிவசேனா, துணை முதல்வர் அஜித் பவாரின் தேசியவாத காங்கிரஸ் ஆகியன உள்ளன. இதனால், பாஜக கூட்டணியே மீண்டும் ஆட்சியமைக்க இருக்கிறது என்பது உறுதியாகிவிட்டது. என்றாலும், அடுத்த முதல்வர் யார் என்ற கேள்வி தற்போதே தொடங்கிவிட்டது.
இந்த நிலையில், சமூக வலைதளமான இன்ஸ்டாவில் மட்டும் 5.6 மில்லியன் ஃபாலோயர்ஸ்களைக் கொண்டுள்ள நடிகரும் அரசியல்வாதியுமான அஜாஸ் கான் வெறும் 155 வாக்குகள் மட்டுமே எடுத்து படுதோல்வியைத் தழுவியுள்ளார். இவர் மகாராஷ்டிராவின் வெர்சோ தொகுதியில், சந்திரசேகர் ஆசாத்தின் ஆசாத் சமாஜ் கட்சியால் (கன்ஷி ராம்) களமிறக்கப்பட்டார்.
என்றாலும், இந்த தேர்தலில் அவர் படுதோல்வியைச் சந்தித்துள்ளார். இந்த தொகுதியில் அவரைவிட, நோட்டாவுக்கு 1,298 வாக்குகள் கிடைக்கப் பெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. இவர், கடந்த மக்களவைத் தேர்தலின்போது மும்பை வடக்கு மத்திய தொகுதியில் போட்டியிட்டார். அங்கும் அவரால் தாக்கத்தை ஏற்படுத்த முடியவில்லை.
அஜாஸ் கான் தோல்வி குறித்து, “சமூக வலைதளங்களில் பயனர்கள் அதிகமிருக்கிறார்கள் என்பதற்காக, எல்லோரும் அவருக்கே வாக்கு அளிக்க வேண்டும் என்பது எந்த விதத்தில் நியாயம்? தவிர, வாக்கு செலுத்துவது என்பது அவர்களுடைய உரிமை மற்றும் கடமையாகும். மேலும், அவருக்கு அந்த தொகுதியில் மட்டும் அவருக்கு இத்தனை மில்லியன் பயனர்கள் இருக்க முடியாது. உலகம் முழுவதும் அவர்களுக்குப் பயனர்களாக இருக்கலாம். அவரின் பயனர்கள் என்பதற்காக எல்லோரும் வாக்கு செலுத்துவார்கள் என நினைப்பது தவறு” எனச் சமூக வலைதள பயனர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
அதேநேரத்தில் இந்த தொகுதியில் உத்தவ் தாக்கரேவின் சிவசேனாவைச் சேர்ந்த ஹாரூன் கான் வெற்றி பெற்றுள்ளார். இவரை எதிர்த்துப் போட்டியிட்ட பாஜகவைச் சேர்ந்த டாக்டர் பாரதி லாவேக்கர் 1,600 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியுள்ளார். ஹாரூன் கான் 65,396 வாக்குகள் பெற்றார். இவரை பாரதி 63,796 வாக்குகள் பெற்று தோல்வியைத் தழுவினார்.