மகாராஷ்டிராவில் பாஜக துணையுடன் சிவசேனாவில் இருந்து பிரிந்த ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. 288 சட்டமன்ற உறுப்பினர்களைக் கொண்ட மகாராஷ்டிர சட்டப்பேரவையின் 5 ஆண்டு பதவிக்காலம் வருகிற நவம்பர் மாதம் 26-ஆம் தேதியுடன் நிறைவடைய உள்ளது. இதையடுத்து, அம்மாநிலத்தில் சட்டப்பேரவைத் தேர்தலை நடத்த தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது. அதன்படி, நாளை மறுநாள் (நவம்பர் 20) ஒரேகட்டமாக தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. நவம்பர் 23ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் எனவும் அது தெரிவித்துள்ளது.
இதையடுத்து அங்கு தேர்தல் களம் சூடுபிடித்த நிலையில், காங்கிரஸ் அங்கம் வகிக்கும் மகா விகாஸ் அகாடிக்கும், பாஜக அங்கம் வகிக்கும் மஹாயுதி கூட்டணிக்கும் கடுமையான போட்டி நிலவுகிறது.
மகா விகாஸ் அகாடி:
காங்கிரஸ், சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ், உத்தவ் தாக்கரேவின் சிவசேனா, சமாஜ்வாடி, விவசாயிகள் மற்றும் தொழிலாளர் கட்சி ஆகியன அங்கம் வகித்துள்ளன.
மஹாயுதி கூட்டணி
பாஜக, ஏக்நாத் ஷிண்டே அணியின் சிவசேனா, அஜித் பவாரின் தேசியவாத காங்கிரஸ் ஆகிய கட்சிகள் இடம்பிடித்துள்ளன.
இரண்டு கூட்டணிகளிலும் தொகுதிவாரியாக இடங்கள் பிரிக்கப்பட்டு களத்தில் வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டுள்ளனர். இந்த நிலையில், இன்றுடன் மகாராஷ்டிராவில் பரப்புரை நிறைவடைந்தது. இதையடுத்து, அந்த மாநிலத்தில் ஆட்சியைப் பிடிக்கப்போவது யார் என்ற கேள்வி தற்போது முதலே எழுந்துள்ளது.
சமீபத்தில் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் இவ்விரு கட்சிகளும் பெற்ற வாக்குகளுக்கும் இடையே குறைந்த அளவு வித்தியாசம் மட்டுமே இருந்தது. எனினும், மகா விகாஸ் அகாடி வெற்றிபெற்றது. மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு சட்டமன்றத் தேர்தலிலும் அதே வெற்றியை மீண்டும் பெறலாம் என நம்பிக்கை கொண்டுள்ளது.
ஆயினும், சட்டமன்றத் தேர்தலைப் பொறுத்தவரை இரு தரப்புக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது. இதனால், முடிவு என்பது யூகிக்க முடியாததாகவே இருக்கிறது. மேலும், ஆளும் அரசில் பணவீக்கம், விவசாயம், தொழில்துறை, வேலைவாய்ப்புகள் போன்றவற்றில் உள்ள பிரச்னைகள் குறித்து எதிர்க்கட்சிகள் பிரசாரத்தில் குற்றஞ்சாட்டி வருகின்றன. தொடர்ந்து ஆளும் அரசுக்கு எதிராக மராத்தா சமூகத்தினரின் இடஒதுக்கீட்டுக்குப் பிரச்னையும் முன்னாடி நிற்கிறது.
இதன் காரணமாக, இச்சமூகத்தினரின் வாக்குகள் காங்கிரஸ் கூட்டணிக்குப் போக வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. இவையெல்லாம் ஒருபுறமிருக்க, மறுபுறம் இரண்டு கூட்டணிகளிலுமே முதல்வர் பதவி ஊசலாடுகிறது. மஹாயுதி கூட்டணியில் பாஜக இந்த முறை 148 தொகுதிகளில் போட்டியிடுகிறது. இதனால், கடந்த முறை போல் இல்லாமல் தேவேந்திர பட்னாவிஸை முதல்வராக்க பாஜக விரும்புகிறது. ஆனால், முதல்வர் ஏக்நாத் ஷிண்டேவோ, மீண்டும் பாஜக தம்மையே முதல்வர் ஆக்கும் என நினைக்கிறார்.
இதே நிலைதான் காங்கிரஸின் மகா விகாஸ் அகாடியிலும் உள்ளது. காங்கிரஸும் இங்கு நிறைய இடங்களில் போட்டியிடுகிறது. என்றாலும், முதல்வர் பதவியைப் பொறுத்தவரை சரத்பவாரின் கட்சியும், உத்தவ் தாக்கரேவின் கட்சியும் முட்டிமோதும் என்றே கூறப்படுகிறது. இதனால், தேர்தலுக்குப் பிறகு அமையும் ஆட்சியின் முதல்வர் நிரந்தரமாக நீடிப்பாரா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
கடந்த 2019-ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் பாஜக, சிவசேனா கூட்டணி வெற்றிபெற்றது. முதல்வர் பதவியை எதிர்பார்த்த உத்தவ் தாக்கரேவுக்கு பாஜக மறுப்பு தெரிவித்தது. அதேநேரத்தில், திடீர் திருப்பமாக தேசியவாத காங்கிரஸின் அஜித் பவார் ஆதரவுடன் பாஜகவின் தேவேந்திர பட்னாவிஸ் முதல்வரானார். அஜித் பவார் துணை முதல்வரானார். ஆனால் பெரும்பான்மையை நிரூபிக்க முடியாததால் மூன்று நாட்களில் இந்த ஆட்சி கவிழ்ந்தது. இதைத் தொடர்ந்து காங்கிரஸ், சரத் பவார் கட்சி, சிவசேனா ஆகியன மகா விகாஸ் அகாடி என்ற கூட்டணியை அமைத்தன.
அதன்படி, சிவசேனாவின் உத்தவ் தாக்கரே முதல்வரானார். ஆனால், இரண்டரை ஆண்டு சிறப்பாய்ப் போய்க் கொண்டிருந்த இந்த ஆட்சியில் சிவசேனா மூத்த தலைவர் ஏக்நாத் ஷிண்டே, அக்கட்சியை உடைக்க உத்தவ் தாக்கரே ஆட்சி கவிழ்ந்தது. இதையடுத்து,ஏக்நாத் ஷிண்டே, பாஜக ஆதரவுடன் முதல்வரானார். பாஜகவின் பட்னாவிஸ் துணை முதல்வரானார். தொடர்ந்து, சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸை உடைத்துக் கொண்டு அஜித் பவாரும் வெளியேறினார். அவரும் ஏக்நாத் ஆட்சியில் இணைந்து மீண்டும் துணை முதல்வரானார். கடந்த 5 ஆண்டுகளில் மகராஷ்டிரா மூன்று முதல்வர்களைச் சந்தித்தது என்பது குறிப்பிடத்தக்கது.