அவுரங்காபாத்தில் ஜெய் ஸ்ரீராம் சொல்ல சொல்லி முஸ்லீம் இளைஞர்களுக்கு மிரட்டல் விடுத்தவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
மகாராஷ்டிரா மாநிலம் அவுரங்காபாத், அசாத் சவுக் என்ற இடத்தில் சாயிக் அமீர் என்பவர் அவரது நண்பருடன் வேலை முடிந்து நேற்று இரவு நடந்து வந்து கொண்டிருந்தார். அப்போது காரில் வந்த சிலர் அவர்களை திடீரென வழிமறித்து ‘ஜெய் ஸ்ரீராம்’ எனக் கூறுமாறு வற்புறுத்தியுள்ளனர். ஆனால் அதை கூற சாயிக் அமீர் மறுப்பு தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து சாயிக் கூறுகையில், “காரில் வந்தவர்கள் எங்களை ஜெய் ஸ்ரீராம் என மந்திரம் கூறுமாறு வற்புறுத்தினர். ஆனால் நாங்கள் மறுப்பு தெரிவித்துவிட்டோம். உடனே அவர்கள் எங்களுக்கு மிரட்டல் விடுத்துவிட்டு தப்பி ஓடிவிட்டனர். ஆனால் அவர்கள் எங்களை தாக்கவில்லை” எனத் தெரிவித்தார்.
இதையடுத்து அப்பகுதியில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் இந்தச் சம்பவம் குறித்த காட்சிகள் அப்பகுதியில் பொறுத்தப்பட்டிருந்த சிசிடிவிக்களில் பதிவாகியுள்ளது.
அண்மை காலங்களில் இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலும் சிறுபான்மையினருக்கு எதிரான இதுபோன்ற நிகழ்வுகள் அரங்கேறி வருகின்றன. இதற்கு காரணம் மத்தியை ஆளும் பாஜகதான் என எதிர்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன.