மகாராஷ்டிர மாநிலம் ராய்கட்டில் சுற்றுலாப் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் வேளாண் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த ஆசிரியர்கள் மற்றும் அலுவலர்கள் 30 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
தபோலி வேளாண் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த 35 பேர் மஹாபலேஸ்வர் பகுதிக்கு இன்று காலை சுற்றுலா சென்றுள்ளனர். ரெய்காட் மஹாபலேஷ்வர்-போலந்பூர் சாலையில் பேருந்து மலையிலிருந்து இறங்கியது. அப்போது அம்பெனாலி பகுதியில் பேருந்து நிலைதடுமாறி பள்ளத்தாக்கில் விழுந்தது. சுமார் 500 அடி ஆழத்தில் பேருந்து விழுந்து சுக்குநூறானது. இதில் பேருந்தில் இருந்த சுமார் 33 பேர் உயிரிழந்ததாக தெரிகிறது.
போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர். அதேபோல், தேசிய பேரிடர் மீட்பு படையினரும் வரவழைக்கப்பட்டுள்ளனர். உள்ளூர் மக்களும் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். சம்பவ இடத்தில் இருந்து இதுவரை 10 பேரின் சடலங்கள் மட்டுமே மீட்கப்பட்டுள்ளன.
இந்தச் சம்பவத்திற்கு மகாராஷ்டிரா முதலமைச்சர் தேவேந்திர பட்னாவீஸ், பிரதமர் மோடி, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர். மீட்பு பணிகளை விரைந்து மேற்கொள்ள தேவேந்திர பட்னாவீஸ் உத்தரவிட்டுள்ளார்.