கர்நாடகா: மகாபாரதமும், ராமாயணமும் கற்பனை என்று மாணவர்களிடம் கூறிய பள்ளி ஆசிரியர் பணிநீக்கம்!

கர்நாடகா: மகாபாரதமும், ராமாயணமும் கற்பனை என்று மாணவர்களிடம் கூறிய பள்ளி ஆசிரியர் பாஜக எம்.எல்.ஏக்கள் ஆதரவு வலதுசாரி அமைப்பினரின் போராட்டத்தால் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
போராட்டம் நடத்திய பெற்றோர்
போராட்டம் நடத்திய பெற்றோர்Pt wen
Published on

கர்நாடக மாநிலம் மங்களூருவில் உள்ள செயிண்ட் ஜெரோசா ஆங்கில வழி மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியர் ஒருவர் மாணவர்களுக்கு பாடம் நடத்துகையில் ராமாயணமும் மகாபாரதமும் கற்பனைக் கதை என கூறியதாக புகார் எழுந்தது.

இந்த பள்ளியில் 7 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கடந்த 8 ஆம் தேதி பாடம் எடுத்துக்கொண்டிருந்த பிரபா என்ற ஆசிரியர் ராமாயணமும் மகாபாரதமும் கற்பனைக்கதை என மாணவர்களிடம் கூறியதாக கூறப்படுகிறது. ராமர் ஒரு புராண உருவாக்கம் என்று கூறியுள்ளார்.

இதனை அந்த மாணவர்கள் தங்களது பெற்றோர்களிடம் கூறியுள்ளனர். இந்த விவகாரத்தை இந்துத்துவ அமைப்பினரும், பாஜகவினரும் கையிலெடுத்து போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர். போராட்டம் நடத்திய வலது சாரி அமைப்பினர், குஜராத் கலவரம், பில்கிஸ் பானு வழக்கு குறித்து ஆசிரியர் பேசியதாகவும், பிரதமர் மோடி குறித்து அவதூறாக கருத்து தெரிவித்ததாகவும் கூறுகின்றனர்.

கடந்த 12 ஆம் தேதி ஆசிரியர் மற்றும் பள்ளி நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுக்ககோரி பெற்றோர் மங்களூர் தெற்கு காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அதில் குழந்தைகள் மனதில் வெறுப்பு உணர்வைத் தூண்டுகிறார் என்றும் பெற்றோர் தெரிவித்துள்ளனர். இதனை அடுத்து பொதுக்கல்வித் துறையின் துணை இயக்குநர் இதுதொடர்பாக விசாரணையை தொடங்கியுள்ளார்.

இதுதொடர்பாக போராட்டம் நடந்த நிலையில், பாஜக எம்.எல்.ஏ வேத்யாஸ் காமத் திங்கட்கிழமை நடந்த போராட்டத்தில் கலந்துகொண்டார். வேதவியாஸ் காமத் மற்றும் மற்றொரு பாஜக எம்.எல்.ஏவான பாரத் ஒய் ஷெட்டி போன்றோர் இந்த பிரச்சனையில் ஆசிரியர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

திங்கட்கிழமை இரவு பள்ளி நிர்வாகம் பெற்றோர்களுக்கு அனுப்பி இருந்த கடிதத்தில் செயிண்ட் ஜெரோசா பள்ளி நிர்வாகம் அந்த ஆசிரியர் பதவியில் இருந்து நீக்கப்படுவதாகவும் அவருக்குப் பதிலாக புதிய ஆசிரியர் நியமிக்கப்படுவார் என்றும் தெரிவித்துள்ளது.

60 ஆண்டுகால வரலாற்றைக் கொண்ட இந்தப் பள்ளி இதற்கு முன் இதுபோன்ற சம்பவத்தைக் கண்டதில்லை என்றும் அரசியலமைப்புச் சட்டத்தை நிலைநிறுத்துவதற்கும், அனைத்து மதங்கள் மற்றும் சமூகங்களை சமத்துவத்துடன் நடத்துவதற்கும் பள்ளி நிர்வாகம் உறுதிபூண்டுள்ளது என்றும் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் பிப்ரவரி 13 ஆம் தேதி இந்த விவகாரம் தொடர்பாக உண்மை கண்டறியும் குழுவை அமைக்குமாறு காங்கிரஸ் தலைவர்கள் கர்நாடக கல்வித்துறையிடம் கோரிக்கை அளித்துள்ளனர். இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய ரமாநாத் நாய் மற்றும் வினய்குமார் கெராகே போன்றோர், “இந்த சம்பவம் குறித்து பாரபட்சமற்ற விசாரணை நடத்தப்பட வேண்டும். போராட்டங்களுக்கு குழந்தைகளைப் பயன்படுத்தும் பாஜக தலைவர்களின் அறிக்கைகள் குறித்தும் விசாரணை நடத்தப்பட்டு இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நடைபெறாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.

இந்நிலையில் இந்திய ஜனநாயக வாலிபர் கூட்டமைப்பு மாநிலத் தலைவர் முனீர் கடிபல்லா, பாஜக எம்.எல்.ஏ ஷெட்டியை கடுமையாக விமர்சனம் செய்துள்ளது. பாஜக எம்.எல்.ஏ ஷெட்டு தன்னுடைய பதவிக்காலத்தில் அரசுப் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் இருக்கும் பிரச்சனைகளை எப்போதாவது தீர்க்க முயன்றுள்ளாரா என தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com