உத்தரப் பிரதேச மாநிலத்தில் மேற்கொள்ளப்பட்ட தரம் ஆய்வில் தோல்வியடைந்ததை அடுத்து மேகி நூடுல்ஸ் மீண்டும் சர்ச்சையில் சிக்கியுள்ளது.
பல்வேறு புகார்களை அடுத்து கடைகளில் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட மேகி நூடுல்ஸ் மாதிரிகள் கடந்த நவம்பர் மாதம் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டன. ஷாஜகான்பூர் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட இந்த தர ஆய்வில் சோதனை செய்யப்பட்ட மேகி நூடுல்ஸ் மனிதர்கள் உண்ணுவதற்கு உகந்தது அல்ல என்பது தெரியவந்தது. இதனால் மாநிலத்தின் பல மாவட்டங்களில் மேகிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, நெஸ்லே நிறுவனத்திற்கு 45 லட்சம் ரூபாய், மூன்று விநியோகஸ்தர்களுக்கு 15 லட்சம் ரூபாய் மற்றும் இரண்டு விற்பனையாளர்களுக்கு 11 லட்சம் ரூபாய் அபராதம் விதித்து மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.
இருப்பினும், தமக்கு இதுவரை அதிகாரப்பூர்வ அறிக்கை எதுவும் வரவில்லை என்றும் வந்த பிறகு சட்டப்படி எதிர்கொள்வோம் என்று நெஸ்லே நிறுவனம் தெரிவித்துள்ளது. கடந்த 2015 ஆம் ஆண்டு மேகியில் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் ரசாயனம் கலந்து இருப்பது கண்டறியப்பட்டு தடை செய்யப்பட்டது. அதன் பின்னர் பல தரம் ஆய்வுகளுக்கு உட்பட்டு மீண்டும் மேகி விற்பனைக்கு வந்தது. இந்த நிலையில் தற்போது மீண்டும் மேகி நூடுல்ஸ் சர்ச்சையில் சிக்கியுள்ளது.