தனிமனித இடைவெளி உள்ளிட்ட கட்டுப்பாடுகளுடன் வழிபாடு நடத்தும் வகையில் அனைத்து மத வழிபாட்டு தலங்களையும் திறக்கக்கோரிய வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஊரடங்கு காரணமாக மக்கள் கூடுவதைத் தவிர்க்கும் விதத்தில் வழிபாட்டுத் தலங்கள் எல்லாம் மூடப்பட்டுள்ளன. இந்நிலையில் மக்கள் மனதில் நம்பிக்கையை வளர்க்கக் கூடிய, சாதகமான எண்ண ஓட்டத்தை உருவாக்கக் கூடிய வழிபாட்டுத் தலங்களை, தனிமனித இடைவெளி உள்ளிட்ட கட்டுப்பாடுகளை விதித்து திறக்கக் கோரி ஆர்.கே.ஜலீல் என்பவர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
ஆனால், வழிபாட்டுத்தலங்களை திறந்தால் தனிமனித இடைவெளி கேள்விக்குறியாகிவிடும் என்றும் அனைத்து பகுதிகளுக்கும் சென்று காவல்துறையோ, சுகாதார பணியாளர்களோ பணிபுரிவது சிரமம் என்பதால் திறக்க அனுமதிக்கக் கூடாது என சுமதி என்பவர் இடையீட்டு மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கை நீதிபதிகள் வினித் கோத்தாரி, புஷ்பா சத்தியநாராயணா விசாரித்தனர்.
அப்போது கோயம்பேடு மற்றும் மதுபானக் கடைகளில் மக்கள் கூடுவதால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை மக்கள் உணர வேண்டும் என தெரிவித்தனர். இந்த வழக்கில் பதிலளித்த மத்திய மாநில அரசு தரப்பு, ஊரடங்கு உத்தரவு மே 17-ல் முடிகிறது. மே 15, 16ல் அது தொடர்பாக முடிவெடுக்க வாய்ப்புள்ளது என தெரிவித்தது. இதனை அடுத்து இந்த வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு வழக்கை மே18ம் தேதிக்கு ஒத்திவைத்தது.