புதுச்சேரி மாநிலம் லாஸ்பேட்டை பகுதியில் கணவன் மற்றும் குழந்தைகளுடன் வசித்து வந்துள்ளார் பெண் ஒருவர். காதல் திருமணம் செய்துகொண்ட இவரின் கணவர் ஹோட்டலில் பரோட்டா மாஸ்டராக வேலை பார்த்து வந்துள்ளார். அப்பெண் மருத்துவர் ஒருவரிடம் உதவியாளராக வேலை பார்த்து வந்துள்ளார். இதற்கிடையே வேலைக்கு செல்லும் தனது மனைவி மீது சந்தேகம் கொண்ட அக்கணவன் அவரை தொடர்ந்து ஆபாசமாக திட்டியும், அடித்தும் வன்கொடுமையில் ஈடுபட்டு வந்துள்ளார்.
இதுதொடர்பாக அந்தப் பெண் கடந்த 2021ம் ஆண்டு வில்லியனூர் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். இதன் பேரில் இருவரையும் காவல்நிலையத்திற்கு அழைத்த போலீஸார், குடும்ப நல நீதிமன்றம் மூலமாக பிரச்னையை தீர்த்துக்கொள்ள அறிவுறுத்தி அனுப்பியுள்ளனர். இதற்கிடையே, மனைவியை மீண்டும் அடித்து துன்புறுத்தியுள்ளார் அக்கணவர்.
இதனால் புதுச்சேரி காவல் கட்டுப்பாட்டு அறைக்கு அழைத்து பேசிய அந்த பெண், தன்னை கணவன் அடித்து துன்புறுத்துவதாக புகார் தெரிவித்த நிலையில், இரண்டு காவலர்கள் அவரது வீட்டுக்கே வந்து விசாரித்து, இருவரும் ஒற்றுமையாக வாழ வேண்டும் என்று கூறிவிட்டு கிளம்பியுள்ளனர்.
ஆனால் அந்த பெண்ணின் கணவர் அவரிடம் தொடர்ந்து பிரச்னை செய்ததால், லாஸ்பேட்டை காவல் நிலையத்திற்கு சென்று மீண்டும் புகார் கொடுக்க முயன்றுள்ளார் பாதிக்கப்பட்ட பெண். அங்கிருந்த தலைமை காவலர் சண்முகத்திடம் நடந்தது அனைத்தையும் கூறிய நிலையில், இருவரையும் தனித்தனியாக விசாரித்துள்ளார் அவர். முதலில் பெண்ணின் கணவனிடம் பேசிய aவர், பிறகு அந்த பெண்ணை அழைத்து பேசியுள்ளார். அப்போது அப்பெண்ணிடம் காவலர் சண்முகம் ஆபாசமாக பேசியதாக கூறப்படுகிறது.
இதற்கிடையே விசாரணையின்போது தனது மனைவி வேறு ஒருவரிடம் தவறான முறையில் பேசுவதாக அக்கணவர் புகார் அளித்துள்ளார். இதுபற்றி அப்பெண்ணிடம் போலீஸார் கூற, “இனி போனில் யாரிடமும் பேச மாட்டேன். ஆனால் இனி எனது கணவன் அடிக்கக்கூடாது. அவருடன் எனக்கு வாழ பிடிக்கவில்லை. அதனால் அவரிடம் இருந்து எனக்கு விவாகரத்து வேண்டும்” என்று எழுதிக்கொடுத்து கையெழுத்து போட்டுள்ளார் அந்தப் பெண்.
மேலும், ‘இனி என் கணவன் பிரச்சனை செய்தால் என்ன செய்வது?’ என்று கேட்டதற்கு தலைமை காவலர் சண்முகம், தன்னுடைய போன் நம்பரை கொடுத்து அழைக்குமாறு கூறியுள்ளார்.
இதன்பேரில் நம்பிக்கையோடு அப்பெண் வீட்டுக்குச் சென்றபோது, அப்பெண்ணிடம் அவரது கணவர் மீண்டும் சண்டை போட்டடுள்ளார். குறிப்பாக காவலர் சண்முகமே தன்னிடம் தன் மனைவி குறித்து அவதூறாக பேசியதாக அக்கணவர் அப்பெண்ணிடம் கூறியுள்ளார். இதையடுத்து காவலர் சண்முகத்திற்கு அழைத்த அப்பெண், ‘இப்படியா சொன்னீர்கள்?’ என்று கேட்டுள்ளார்.
இதற்கு பதிலளித்த போலீஸ் அதிகாரி சண்முகம், “அது மாதிரி நான் எதுவும் கூறவில்லை. அவன் ஒரு குடிகாரன், அப்படித்தான் பேசுவான்” என்று கூறி போனை துண்டித்துள்ளார். இதற்கிடையே, கணவன் மீண்டும் அடித்து துன்புறுத்த, மதிய நேரத்தில் மீண்டும் ஸ்டேஷனுக்கு சென்றுள்ளார் அந்தப் பெண். கணவன் மீது அவர் வாய் மொழியாக அப்போது புகார் கொடுத்த நிலையில், அப்போது ஸ்டேஷனில் இருந்த போலீஸாரை சாப்பிட்டு காவலர் சண்முகம் அனுப்பியதாக சொல்லப்படுகிறது.
தொடர்ந்து, “என் கணவனுடன் என்னால் இனி வாழ முடியாது. விவாகரத்து வாங்கி கொடுங்கள்” என்று அந்தப் பெண் கூறிய நிலையில், வழக்கறிஞர் ஒருவருக்கு அழைத்து உதவி செய்யுமாறு கூறியுள்ளார் காவலர் சண்முகம். பிறகு, அந்த பெண்ணைப் பற்றி விசாரித்து இரட்டை அர்த்தத்தில் பேசியதாக தெரிகிறது.
இதனால் பதறிப்போன அந்தப் பெண், அங்கிருந்து தப்பித்து வீட்டுக்குச் சென்றதாக தெரிவித்துள்ளார். இந்நிலையில், மறுநாளும் அடித்து துன்புறுத்தியுள்ளார் அவரது கணவர்.
தொடர்ந்து தனக்கு நடந்தவற்றை இறைவி அமைப்பைச் சேர்ந்த காயத்திரி ஸ்ரீகாந்திடம் கூறியுள்ளார் அந்தப் பெண். அப்போது, தன் முன்னால்வைத்தே மீண்டும் காவலருக்கு அழைத்து பேசும்படி காயத்திரி கூறியுள்ளார். அதன்படி காவலர் சண்முகத்துக்கு செல்ஃபோனில் அழைத்து பேசியுள்ளார் அந்தப் பெண்.
அப்போது, வக்கீலுக்கு ஃபீஸ் கொடுக்க பணம் இல்லாததால் வக்கீலை பார்க்கவில்லை என்று இப்பெண் கூற, தானே வக்கீலிடம் பேசுவதாக கூறிவிட்டு செல்ஃபோனை ஹோல்டில் வைத்து சிறிது நேரத்தில் மீண்டும் பேசியுள்ளார் காவலர் சண்முகம். அப்போதும் அவர் மீண்டும் ஆபாசமாக பேசியதாக சொல்லப்படுகிறது.
இவை அனைத்தையும் கவனித்த இறைவி அமைப்பைச் சேர்ந்த காயத்திரி, சண்முகம் மீது புகார் கொடுக்க லாஸ்பேட்டை காவல் ஆய்வாளர் ராஜ்குமார் அலுவலகத்திற்கு அந்த பெண்ணை அழைத்துச் சென்று புகார் கொடுத்துள்ளார்.
தொடர்ந்து இரண்டு வார போராட்டத்திற்கு பிறகு காவலர் மீதான புகாருக்கு முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டு விசாரணை தொடங்கியுள்ளது. இதற்கிடையே, 2021ம் ஆண்டு ஆகஸ்ட் 20ம் தேதி கைது செய்யப்பட்ட சண்முகம், அன்றைய தினமே ஜாமீன் பெற்று வெளியே வந்துள்ளார்.
அதே நாளில் அவர் பணியிடை நீக்கமும் செய்யப்பட்டார். இந்த வழக்கு தொடர்ந்து நடந்து வரும் நிலையில், வழக்கை வாபஸ் பெற வேண்டும் என்று புகார் கொடுத்த பெண்ணையும், அவரது தாயையும் சண்முகத்தின் நண்பர்கள் கணேசன் என்பவர் உட்பட 4 பேர் மிரட்டியதாக கூறப்படுகிறது. இதனிடையே, தனக்கு ஏதாவது நேர்ந்தால், இவர்கள்தான் காரணம் என்று மீண்டும் புகார் அளித்துள்ளார் அந்தப் பெண். இப்படியாக வழக்கு நடந்து வரு நிலையில், தன் மீதான எஃப்.ஐ.ஆர் ஐ தள்ளுபடி செய்ய வேண்டும் என்று சண்முகம் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார்.
இந்த மனு மீதான விசாரணை நீதிபதி தமிழ்செல்வி அமர்வுக்கு முன் வந்தபோது விசாரித்த நீதிபதி, பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டிய காவலரின் இத்தகைய செயலை கண்டித்ததோடு FIR Quash செய்ய வேண்டி தாக்கல் செய்த வழக்கினையும் தள்ளுபடி செய்தார்.
இந்த விவகாரத்தில், பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு ஆதரவாக நின்று போராடி வரும் இறைவி அமைப்பைச் சேர்ந்த காயத்திரி ஸ்ரீகாந்திடம் நாம் பேசினோம். அப்போது அவர், “சண்முகத்தின் மீது கொடுக்கப்பட்டது முதல் புகார் கிடையாது. இதற்கு முன்னறே பெண்கள் தொடர்பான புகாரில் அவர் சிக்கியுள்ளார்.
இந்த புகாரில் இருந்து வெளிவருவதற்கு, என்னிடம் சமாதானம் பேச அழைத்தார். 5 லட்சம் ரூபாய் கொடுப்பதாக கூறி, வாபஸ் பெற வைக்குமாறு கேட்டுக்கொண்டார். ஆனால், அதற்கெல்லாம் நாங்கள் பணியவில்லை. இதே இடத்தில் வேறு யாரும் இருந்தால், மிரட்டியோ, பணம் கொடுத்தோ பணிய வைத்திருப்பார்கள்” என்று கூறியுள்ளார்.
பாதிக்கப்பட்ட பெண் கொடுத்த புகாரில் காவலர் சஸ்பெண்ட் செய்யப்பட்டாலும், 2 ஆண்டுகளாக வழக்கு விசாரணை நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.