சி.ஆர்.பி.எஃப். வீரர்களை வீட்டு வேலைகளில் ஈடுபடுத்தி ஆர்டர்லி முறையை பின்பற்றும் மத்திய ரிசர்வ் போலீஸ் படை அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்குமாறு மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மத்திய ரிசர்வ் போலீஸ் படையிலிருந்து நீக்கம் செய்யப்பட்ட காவலர் முத்து என்பவர், சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில் மத்திய ரிசர்வ் போலீஸ் படையில் கடந்த 2004-ம் ஆண்டு கான்ஸ்டபிள் பணிக்கு தேர்வு செய்யப்பட்டதாகவும், ஜார்கண்ட் மாநிலத்தில் வேலை பார்க்கும் போது தனது உயர் அதிகாரி தன்னை ஆர்டர்லி வேலை பார்க்க உத்தரவிட்டதாகவும், ஆனால் அதற்கு தான் மறுப்பு தெரிவித்ததாக குறிப்பிட்டுள்ளார்.
கான்ஸ்டபிள் பணிக்கான அனைத்து வேலைகளும் செய்ய தயாராக இருந்த நிலையில் , உயர் அதிகாரிகளின் உத்தரவின்பேரில், ஆர்டர்லியாக பணிபுரிய மறுத்ததால், பழிவாக்கும் நோக்கில் தன் மீது குற்றச்சாட்டுகளை கூறி பணி நீக்கம் செய்யப்பட்டதாக தெரிவித்துள்ளார். எனவே தனது பணி நீக்கத்தை ரத்து செய்ய உத்தரவிட வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டிருந்தார்.
வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதி எஸ்.எம். சுப்பிரமணியம், இந்திய அரசியலமைப்புச் சட்டம் பிரிவு 21, மனிதர்களை கண்ணியமாக நடத்தப்பட வேண்டும் என்று தெரிவித்துள்ளதாக சுட்டிக்காட்டி உள்ளார். கண்ணியத்தோடு வாழ்வதற்கான உரிமை உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ள அவர், கான்ஸ்டபிளை ஆர்டர்லியாக பணிபுரிய வற்புறுத்துவது கண்ணியத்துக்கு எதிரான நடவடிக்கை என்றும் தெரிவித்துள்ளார்.
எனவே மனுதாரரின் பணி நீக்க உத்தரவை ரத்து செய்து உத்தரவிடுவதாகவும், மனுதாரருக்கு மீண்டும் பணி வழங்க வேண்டும் என்றும் அவர் உத்தரவிட்டுள்ளார். ஆர்டர்லி முறையை ஒழிக்கும் மத்திய அரசின் உத்தரவை முழுமையாக அமல்படுத்த வேண்டும் என்றும் நீதிபதி தெரிவித்துள்ளார். ஆர்டர்லி முறையை பயன்படுத்தி வீரர்களை வீட்டு வேலைகளில் ஈடுபடுத்தும் மத்திய ரிசர்வ் போலீஸ் படை உயர் அதிகாரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.