LIC பங்கு விற்பனை - மத்திய அரசின் திருத்தங்களை எதிர்த்த வழக்கு தள்ளுபடி!

LIC பங்கு விற்பனை - மத்திய அரசின் திருத்தங்களை எதிர்த்த வழக்கு தள்ளுபடி!
LIC பங்கு விற்பனை - மத்திய அரசின் திருத்தங்களை எதிர்த்த வழக்கு தள்ளுபடி!
Published on

எல்.ஐ.சி. பங்குகளை விற்பனை செய்யும் வகையில் நிதி சட்டத்திலும், எல்.ஐ.சி. சட்டத்திலும் மத்திய அரசு மேற்கொண்ட திருத்தங்களை எதிர்த்த வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்திய ஆயுள் காப்பீட்டு கழகத்தின் (LIC) பங்குகளை விற்பனை செய்ய மத்திய அரசு முடிவு செய்தது. பங்குகளை விற்க வழிவகை செய்யும் வகையில் நிதிச் சட்டத்திலும் இந்திய ஆயுள் காப்பீட்டு கழகத்தின் சட்டத்திலும் மத்திய அரசு சில திருத்தங்களை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றியது. இதை எதிர்த்து எல்.ஐ.சி. பாலிசிதாரரான பொன்னம்மாள் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார். அவர் அந்த மனுவில், இந்திய அரசியல் சாசனம் 110வது பிரிவின் கீழ் பண மசோதாவாக அறிமுகம் செய்யப்பட்ட இந்த திருத்தங்கள், பணமசோதா வரம்புக்குள் வராது என்பதால், இந்த திருத்தங்களை ரத்து செய்ய வேண்டும் எனக் கோரி இருந்தார்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. எல்ஐசி பங்குகளில் 5 சதவீதத்தை விற்பனை செய்ய மத்திய அரசுக்கு அதிகாரம் உள்ளதாகவும், அதற்கு நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்துள்ளதாகவும் நீதிபதிகள் குறிப்பிட்டனர். அதனால், அரசியல் சாசனத்தின்படி இந்த சட்ட திருத்தம் செல்லும் எனக்கூறி, வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

மேலும், 50 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான பாலிசி எடுத்துள்ள மனுதாரர் அரசின் பொது நல கொள்கையில் தலையிட முடியாது எனக் குறிப்பிட்டனர். 65 ஆயிரம் முதல் 70 ஆயிரம் கோடி ரூபாய் வரை அரசுக்கு நிதி கிடைக்கும் திட்டத்தை எதிர்த்து மனுதாரர் வழக்கு தொடர்ந்துள்ளதாகவும், இந்த நிதி நாட்டின் வளர்ச்சிக்கு பயன்படுத்தப்படும் எனவும் நீதிபதிகள் தெரிவித்தனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com