மத்தியப் பிரதேசத்தில் சிறுமி ஒருவருக்கு நேற்று, நேர்ந்த கொடூரம், உலகிலேயே யாருக்கும், குறிப்பாக எந்தப் பெண் குழந்தைகளுக்கும் நேரக்கூடாது என்பதுதான் அனைவருடைய வேண்டுகோளாக இருக்கிறது. அதற்குக் காரணம், பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாக்கப்பட்ட அந்தச் சிறுமி உதவி கேட்டு உஜ்ஜயினி சாலையில் இருந்த ஒவ்வொரு வீட்டுக் கதவுகளையும் தட்டியுள்ளார். ஆனால் யாரும் உதவவில்லை. இப்படியாக, 8 கிலோ மீட்டர் உதவி தேடி அலைந்துள்ளார். அதிலும் கொடூர எண்ணம் பதித்த ஆண் ஒருவர், அந்தச் சிறுமியைத் திட்டி அனுப்பவதையும் வீடியோவில் காண முடிகிறது.
இந்த வீடியோதான் இணையத்தில் வெளியாகி, இந்திய நாட்டின் இருண்ட முகங்களை வெளிக்காட்டியிருக்கிறது. இறுதியில் அந்தச் சிறுமியின் வேதனையைப் புரிந்த சாமியார் ஒருவர் அவருக்கு உதவி உள்ளார். அவர், உஜ்ஜயினி நகரத்திலிருந்து 15 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பட்நகர் சாலையில் அமைந்திருக்கும் ஆசிரமத்தின் சாமியார் ஆவார். அவரது பெயர் ராகுல் சர்மா. அவர், கடந்த செப். 25ஆம் தேதி காலை 9.30 மணியளவில் ஆசிரமத்திலிருந்து வெளியே சென்றபோதுதான் சிறுமியின் அவலநிலையைப் பார்த்துள்ளார்.
இதுகுறித்து அவர், “என்னிடம் இருந்த ஆடையை அந்தச் சிறுமிக்குக் கொடுத்து உதவினேன். அந்தச் சிறுமியால் பேச முடியவில்லை. வாயில் ரத்தம் கசிந்தது. கண்கள் வீங்கியிருந்தன. உடனே, அவரது நிலைமையைக் கண்டு 100ஐத் தொடர்புகொண்டேன். அதன்மூலம் காவல் துறையைத் தொடர்புகொள்ள முடியவில்லை. இதையடுத்து, அருகில் உள்ள மஹாகல் எல்லைக் காவல் நிலையத்தைத் தொடர்புகொண்டு விவரம் தெரிவித்தேன். அவர்கள் அடுத்த 20 நிமிடங்களில் அந்த இடத்துக்கு வந்து சேர்ந்தனர்.
நாங்கள் சிறுமியிடம், ‘நீ பாதுகாப்பாய் இருக்கிறாய். உன்னைப் பற்றி பெற்றோரிடம் தெரிவிக்க வேண்டும்’ என அவரது பெயர், ஊர், பெற்றோர் பற்றிய விவரங்கள் கேட்டோம். அவரின் பாதுகாப்புக்கு, உறுதியும் அளித்தோம். ஆனால் அவர் மிகவும் பயந்தபடியே இருந்தார். ’போலீசார் வந்த உனக்கு நிச்சயம் உதவுவார்கள்’ என்று நான் சொன்னதன்பேரிலேயே அவர், என்னை முழுவதுமாக நம்ப ஆரம்பித்தார். அந்தச் சமயத்தில் (போலீசார் வருவதற்கு முன்பு) அவரை, வேறு சிலர் அணுகியபோது, அதைக் கண்டு பயந்துபோய், என் பின்னால் ஒளிந்துகொண்டார். பின்னர் போலீசார் வந்து அவரை அழைத்துச் சென்றனர். அதன்பிறகு அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்” எனத் தெரிவித்துள்ளார்.
இது ஒருபுறமிருக்க, மறுபுறம் இந்த சம்பவம் நிகழ்ந்து மூன்று நாட்களுக்கு மேலாகியும் வழக்கு தொடர்பாக ஒரு முன்னேற்றமும் ஏற்படவில்லை எனவும், மாறாக முரண்பாடுகள் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, இந்த வழக்கு தொடர்பாக ஆட்டோ ஓட்டுநர் ஒருவர் கைது செய்யப்பட்டதாகவும், அவருடைய ஆட்டோவில் ரத்தம் சிந்தி இருந்ததாகவும் போலீஸ் தரப்பில் முதலில் கூறப்பட்டது. தற்போது, சிறுமி வழக்குடன் ஆட்டோ ஓட்டுநர் பற்றிய ஆதாரங்கள் இணையவில்லை எனக் கூறப்படுகிறது.
ஆகையால், தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அதேநேரத்தில் அந்தச் சிறுமி பள்ளிக்கூடம் ஒன்றில் படித்து வந்ததாகவும், கடந்த 24ஆம் தேதி காணாமல் போனதாகவும், அதுகுறித்து வழக்கு பதியப்பட்டிருப்பதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும், அந்தச் சிறுமிக்கு சிலர் உதவியிருப்பதாகவும், அவர் கையில் ரூ.120 இருந்ததாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர். இதனால் இவ்வழக்கைப் பொறுத்தவரை போலீஸ் வாக்குமூலங்களிலும், வழக்கு ஆவணங்களிலும் பல முரண்பாடுகள் இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.