மத்தியப் பிரதேச மாநிலம் ரேவா மாவட்டத்தில் உள்ள ஹினோட்டா ஜோரோட் என்ற கிராமத்தில் மம்தா பாண்டே மற்றும் ஆஷா பாண்டே என்று இரு பெண்களுக்கு உறவினர்களுடன் நிலத் தகராறு இருந்து வந்துள்ளது.
இந்நிலையில் அந்த நிலத்தில் உறவினர்கள் சாலை அமைக்க முயன்றுள்ளனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, சாலை அமைக்கும் சரளை மண்ணை சுமந்து நின்ற டிரக்கின் முன் அமர்ந்து இரண்டு பெண்களும் போராட்டம் நடத்தினர்.
இந்த நிலையில் அந்த டிரக்கில் இருந்த மண் இரண்டு பெண்களின் மீதும் கொட்டப்பட்டதால் கிட்டத்தட்ட அவர்கள் முழுதாக மண்ணில் புதைந்தனர். உடனே அருகில் இருந்த கிராமவாசிகள் துரிதமாகச் செயல்பட்டு அந்த பெண்களை மீட்டு, சிகிச்சைக்காக நலவாழ்வு மையத்திற்கு அனுப்பி வைத்தனர். தற்போது அவர்கள் இருவரும் நலமுடன் இருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றனர்.
பெண்கள் மண்ணில் இருந்து மீட்கப்படும் வீடியோ வைரலாகி வருகிறது. என்றாலும் இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில் சம்பந்தபட்ட டிரக்கைக் கைப்பற்றியுள்ளனர். மேலும் இதில் நபர் ஒருவரையும் கைது செய்துள்ளர். தப்பியோடிய இருவரைத் தேடி வருவதாகவும் காவல் துறையினர் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து ஏடிஜி ஜெய்தீப் பிரசாத், ”இது குடும்பப் பிரச்னை. இதுதொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது” என்றார்.
ஆயினும் இந்த சம்பவம் மத்தியப் பிரதேச அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து காங்கிரஸ் இளைஞரணித் தலைவர் ஸ்ரீனிவாஸ் பி.வி, பாஜக தலைமையிலான மத்தியப் பிரதேச அரசைக் கடுமையாகச் சாடியுள்ளார்.
இதையும் படிக்க: தொலைதூர காதல்| புது மனைவிக்காக தினமும் 320 கி.மீ. பயணிக்கும் சீன இளைஞர்