கடந்த 2019ஆம் ஆண்டு இறுதியில் சீனாவில் உருவானதாக கருதப்படும் கொரோனா வைரஸ், உலகம் முழுவதும் பரவி, பல கோடிக்கணக்கான உயிர்களைக் காவு வாங்கியது. இதற்கு தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்ட பிறகு, உயிர்கள் பலியாவது கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. என்றாலும், இன்னும் பல நாடுகளில் கொரோனா வைரஸ் திரிபு உருமாற்றம் அடைந்து, பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.
இந்தியாவிலும் இதன் தாக்கம் தற்போது அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், இந்தியாவில் தாக்குதலுக்குள்ளான கொரோனா 2வது அலையின்போது அதில் பாதிக்கப்பட்ட ஒருவர் உயிரிழந்ததாகவும், தற்போது அவர் மீண்டும் உயிரோடு வந்திருப்பதாகவும் சொல்லப்படும் தகவல், நாடு முழுவதும் அதிர்ச்சியையும் ஆச்சர்யத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
மத்தியப் பிரதேசத்தின் தார் மாவட்டத்தைச் சேர்ந்தவர் கமலேஷ் படிதார். 35 வயதான இவர், 2021ஆம் ஆண்டு இந்தியாவில் ஏற்பட்ட கொரோனா இரண்டாவது அலையின்போது, கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்ததாகக் கூறப்படுகிறது. அந்தச் சமயத்தில் கமலேஷுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும் பலனளிக்காமல் அவர் இறந்துவிட்டதாகவும், அவரது இறுதிச்சடங்கை தாமே செய்துவிட்டோம் எனவும் மருத்துவமனை நிர்வாகம் உறவினர்களிடம் தெரிவித்துள்ளது. அதேநேரத்தில், வேறு சில ஊடகங்கள் அவரது, உடலை குடும்பத்தினரிடம் ஒப்படைத்ததாகக் கூறியுள்ளது. இதில் எது உண்மை என்பது போலீசாரின் விசாரணையிலேயே தெரியவரும்.
என்றாலும், கமலேஷ் படிதார் இறந்ததாக எண்ணி, அவரது குடும்பத்தினர் அவருக்குச் செய்ய வேண்டிய மற்ற இறுதிச் சடங்குகளைச் செய்துள்ளனர். இந்த நிலையில், 2 ஆண்டுகளுக்குப் பிறகு நேற்று (ஏப்ரல் 15) தன்னுடைய வீட்டுக்குத் திரும்பியுள்ளார்.
நேற்று காலை அவர், தன்னுடைய உறவினர் வீட்டுக் கதவைத் தட்டியுள்ளார். அதைப் பார்த்த அவர்கள் அதிர்ச்சியும் ஆச்சர்யமும் அடைந்துள்ளனர். அவரை அடையாளம் கண்டுள்ள குடும்பத்தினர், தற்போது அவரோடு கொண்டாடி மகிழ்ந்து வருகின்றனர்.
இதுகுறித்து கமலேஷ் படிதார் குடும்பத்தாரிடம், தாம் அகமதாபாத்தில் ஒரு கும்பலுடன் இருந்ததாகவும், அவர்கள், தினம் தமக்கு போதை ஊசி செலுத்தியதாகவும் தெரிவித்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மத்தியப் பிரதேசம் மட்டுமல்லாது நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கும் இந்த விவகாரம் குறித்து மேலும் காவல் துறையில் விசாரிக்கப்பட்டு வருகிறது.