மனிதனின் வாழ்வில் நிறம் முக்கியப் பங்கு விகிக்கிறது. அனைத்து நிறங்களும் சமமானதே. அதேபோன்றுதான் கறுப்பு நிறம். ஆனால், நிறத்தை கொண்டு மனிதர்களை இழிவாக பார்க்கும் பழக்கும் இன்றளவும் பல நாடுகளில் இருந்து வருகிறது. அமெரிக்கா போன்ற நாடுகளில் இன்றளவும் கருப்பின மக்கள் பிரச்னை எழுந்த வண்ணம் தான் உள்ளது. இந்தியா போன்ற நாடுகளில் நிறத்தை வைத்து பாகுபடுத்தி சிலர் பார்க்கின்றனர். அதில் சாதிய மனநிலையும் வெளிப்படுகின்றனது. உண்மையில், மனிதர்கள் கறுப்பாக இருக்கும்பட்சத்தில் அவர்களை கேள்வி செய்யும் வழக்கத்தை சினிமாக்களிலும் தொடர்கிறார்கள். ரஜினிகாந்த் நடித்த சிவாஜி படத்தில் கருப்பாக இருக்கும் இளம் பெண்களை அங்கவை, சங்கவை என்று மிகவும் எள்ளி நகையாடி இருப்பார்கள். இதுமிகவும் அறுவறுப்பான விஷயம். ஆம், அப்படியான ஒரு சம்பவம்தான் மத்தியப் பிரதேசத்தில் நடைபெற்றுள்ளது.
மத்தியப் பிரதேச மாநிலம் குவாலியர் நகரைச் சேர்ந்தவர் விஷால் மோகியா. 24 வயதான இவருக்கு கடந்த 14 மாதங்களுக்குத் திருமணம் நடைபெற்றது. இந்த நிலையில், விஷால் மோகியா கருப்பாக இருப்பதால், திருமணமான நாள் முதல் அவரது மனைவி அவரை கிண்டல் செய்து வந்ததாகக் கூறப்படுகிறது. அத்துடன், நிறத்தை காரணம் காட்டி அடிக்கடி அவருடன் சண்டையிட்டும் வந்துள்ளார்.
இதற்கிடையில், விஷால் மோகியாவின் மனைவிக்கு கடந்த 10 தினங்களுக்கு முன்பு பெண் குழந்தை பிறந்தது. இக்குழந்தையை கணவனின் வீட்டில் வைத்துவிட்டு அந்தப் பெண், தனது தாய் வீட்டிற்கு சென்றுவிட்டார். மனைவியை அழைத்து வருவதற்காக அவரது வீட்டிற்கு விஷால் மோகியா சென்றபோது, கணவரின் கருப்பு நிற பிரச்னையை காரணம் காட்டி அவருடன் செல்ல மறுத்துவிட்டார். இதையடுத்து விஷால் மோகியா, தனது தாயுடன் சென்று மகளிர் போலீசில் புகார் அளித்துள்ளார்.
அதில், தான் கருப்பு நிறமாக இருப்பதால் மனைவி தன்னைவிட்டுப் பிரிந்து சென்றுவிட்டதாக தெரிவித்துள்ளார். இந்த விவகாரம் தொடர்பாக வரும் ஜூலை 13ஆம் தேதி இருவரையும் அழைத்து கவுன்சிலிங் கொடுக்க போலீசார் திட்டமிட்டுள்ளனர். திருமணமாகி ஒரு குழந்தை உள்ள நிலையில், நிறத்தை காரணம் காட்டி கணவனை மனைவி பிரிந்து சென்ற சம்பவம் பேசுபொருளாகியுள்ளது.