ஆபாச படங்களால்தான் பாலியல் குற்றங்கள் அதிகரித்துள்ளதாக மத்திய பிரதேச உள்துறை அமைச்சர் புபேந்திர சிங் குற்றம்சாட்டியுள்ளார்.
மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் 6 மாத பெண் குழந்தை கடத்தப்பட்டது. பின்னர் அந்தக் குழந்தை ராஜ்வாடா பகுதியில் உள்ள வணிக வளாகக் கட்டடம் ஒன்றில் இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டது.
குழந்தையின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பியதில், குழந்தை பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கொலை செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது. இந்தச் சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரித்தக் காவல்துறையினர், சிசிடிவி கேமரா காட்சிகளைக் கொண்டு சுனில் பில் (21) என்ற இளைஞரை கைது செய்தனர்.
இந்தச் சம்பவம் மத்திய பிரதேசம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. தற்போது மத்திய பிரதேசத்தில் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. இச்சம்பவம் தொடர்பாக பேட்டியளித்த அம்மாநில முதலமைச்சர் சிவ்ராஜ் சிங்,
“இந்தப் பாலியல் வன்கொடுமை சம்பவம் என்னை மனதளவில் அதிர்ச்சியடைய செய்துள்ளது. அந்தக் குழந்தைக்கு ஒரு கொடுமையான துயரம் நடந்துள்ளது. இதுபோன்ற சம்பவங்களில் நாம் விழிப்புடன் இருக்க வேண்டும். குற்றவாளி ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ளார். விரைவில் அவருக்கு உரிய தண்டனை வழங்கப்படும்’ என்று கூறினார்.
இதுதொடர்பாக அமைச்சர் புபேந்திர சிங் கூறுகையில், “பாலியல் வன்கொடுமைகள் மற்றும் சிறுமிகள் மீதான பாலியல் வன்கொடுமைகள் அதிகரிப்பதற்கு காரணம் ஆபாச படங்கள்தான். அதை மத்திய பிரதேசத்தில் முற்றிலும் தடை வேண்டும் என மத்திய அரசுக்கு வலியுறுத்தியுள்ளோம்” என்று கூறியுள்ளார்.